தமிழகத்தை பாலைவனமாக்க மோடி திட்டமிட்டுள்ளார் வைகோ குற்றச்சாட்டு

டெல்டா விவசாயிகளை வஞ்சித்து தமிழகத்தை பாலைவனமாக்க மோடி திட்டமிட்டுள்ளார் என செங்கிப்பட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் வைகோ குற்றம்சாட்டினார்.
தமிழகத்தை பாலைவனமாக்க மோடி திட்டமிட்டுள்ளார் வைகோ குற்றச்சாட்டு
Published on

திருக்காட்டுப்பள்ளி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி காவிரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் வைகோ தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார். இதன் முதல் கட்டமாக செங்கிப்பட்டியில் நேற்று மாலை அவர் பிரசாரத்தை தொடங்கினார். அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த பயணம் கட்சிக்கு ஆதரவு கேட்டு அல்ல. ஓட்டு கேட்பதற்காக அல்ல. வருங்கால மக்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக தான் நடக்கிறது. இதில் கட்சி கொடிக்கு இடமில்லை. பழந்தமிழர் பண்பாட்டு சின்னமாக விளங்கிய புலி, வில், மீன் ஆகிய உருவங்கள் பொறித்த கொடி மட்டுமே உண்டு. காவிரி மேலாண்மை வாரியம் அமைந்தால் என்ன பயன் என்று சிலர் கேட்கலாம். காவிரி ஒழுங்காற்ற குழுவின் கீழ் கர்நாடக அணைகள் வந்துவிடும். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீர் திறக்க வாய்ப்பு ஏற்படும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கால அவகாசம் கேட்கிறது மத்திய அரசு. இதற்கு உச்சநீதிமன்றமும் துணை போகிறது. கர்நாடக அரசுக்கு ஆதரவாக மோடி இருக்கிறார் என்பதை விட டெல்டா விவசாயிகளை வஞ்சித்து தமிழகத்தை பாலைவனமாக்க மோடி திட்டமிட்டுள்ளார் என்பதே உண்மை.

சோழவள நாட்டிற்கு வரும் ஆபத்தை தடுக்க அறப்போருக்கு ஆயத்தம் ஆகுங்கள் என்று கேட்டுக் கொள்ளவே இந்த பயணம். தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகங்கள் எதையும் இயங்க விட கூடாது. அறவழி போராட்டமாக இந்த போராட்டம் தொடரும். தமிழகத்தில் துணை ராணுவம் வந்து இறங்கி இருப்பதாக கூறினார்கள். இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது இந்திய ராணுவத்திற்கே பயப்படாதவர்கள் தமிழர்கள். இதற்கு எல்லாம் நாங்கள் பயப்படமாட்டோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் கல்லணையில் போராட்டம் நடத்தினால், தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., கூறினார். அதற்கு நானும் (வைகோ) ஆதரவு அளிக்கிறேன்.

கூட்டத்தில் ம.தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் துரை.பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் உதயகுமார், மாநில விவசாய அணி செயலாளர் முருகன், துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் சிமியோன்சேவியர்ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நீலமேகம், காங்கிரஸ் வட்டார தலைவர் அறிவழகன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் அய்யாக்கண்ணு, தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அய்யனாபுரம் முருகேசன், லெனின் ராஜப்பா மற்றும் பலர் கலந்து கொண்டனர். ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் நந்தகுமார் வரவேற்றார்.

முன்னதாக வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

காவிரி தண்ணீர் உரிமையை தடுத்து நிறுத்தி கர்நாடகம் தமிழக அரசுக்கு அநீதி இழைத்துவிட்டது. காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தத்திற்கு விரோதமாக 1970-ம் ஆண்டுகளில் ஹேரங்கி, ஹேமாவதி, கபிணியில் 3 அணைகளை கட்டிய போது, கர்நாடகம் மத்திய அரசிடம் எந்த அனுமதியும் பெறவில்லை. தமிழக அரசின் ஒப்புதலையும் பெறவில்லை.

1990-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டவுடன் கர்நாடக அரசு அவசர சட்டம் போட்டு, அந்த நடுவர் மன்றம் செல்லாது என்று அறிவித்தது. அதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. ஒருசில ஆண்டுகளில் பலத்த வெள்ளம் வந்தபோது காவிரியில் வடிகாலைப்போல தண்ணீர் வந்ததே தவிர நடுவர் மன்ற தீர்ப்பின்படி கர்நாடகம் ஒருபோதும் நடந்துகொள்ளவில்லை.

இந்த பிரச்சினை இப்படியே தொடர்ந்துகொண்டிருக்கக்கூடிய நிலையில் மேகதாது ராசிமணலில் புதிதாக 2 அணைகளைகட்டி 130 டி.எம்.சி. தண்ணீர் தேக்க கர்நாடக அரசு முடிவெடுத்துவிட்டது. இதுபற்றி 6 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரிக்கை செய்தேன். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு இணையானது. இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் பூதலூர், திருவையாறு வடக்கு, தெற்கு ஒன்றியங்களில் உள்ள 44 கிராமங்களில் வேனில் நின்றபடி வைகோ சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இன்று (திங்கட்கிழமை) மாலை மருங்குளம் பகுதியிலும், ஒரத்தநாடு பொதுக்கூட்டத்திலும் வைகோ பேசுகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com