மண்ணாடிப்பட்டு கொம்யூனில் 21 சிறு வழிகளை மூடவேண்டும் சுகாதாரத்துறை இயக்குனர் வேண்டுகோள்

மண்ணாடிப்பட்டு பகுதியில் 21 வழிகளை மூட வேண்டும் என அரசுக்கு சுகாதாரத்துறை இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மண்ணாடிப்பட்டு கொம்யூனில் 21 சிறு வழிகளை மூடவேண்டும் சுகாதாரத்துறை இயக்குனர் வேண்டுகோள்
Published on

புதுச்சேரி,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம், புதுவை மாநிலத்தின் எல்லை பகுதிகளும் சீல் வைக்கப்பட்டு உள்ளது. இருந்த போதிலும் கடலூர், விழுப்புரம் மாவட்ட பகுதிகளில் உள்ளவர்கள் கிராமப்புற சாலைகள் வழியாக இருசக்கர வாகனங்களில் புதுச்சேரிக்கு வந்து செல்கின்றனர்.

கொரோனா அச்சுறுத்தல் விழுப்புரம் மாவட்டத்தில் அதிகம் இருப்பதால் தமிழக பகுதியான ஐவேலி, பொம்பூர், பக்கிரிபாளையம், கண்டமங்கலம், பெரியபாபு சமுத்திரம், குயிலாப்பாளையம், மதுரப்பாக்கம் வழியாக வருபவர்கள் புதுவையின் மணலிப்பட்டு, சோரப்பட்டு, செல்லிப்பட்டு, மண்ணாடிப்பட்டு, கூனிச்சம்பட்டு கிராமங்களில் நுழைந்து வருகின்றனர். இதனால் திருக்கனூர், காட்டேரிகுப்பம் பகுதிகள் முழுவதும் சீல் வைக்கப்பட்டு பொதுப்பணித்துறை மற்றும் போலீசா ரின் முழு கண்காணிப்பில் உள்ளது.

வேண்டுகோள்

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஒருவர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். தற்போது கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 பேரும், மாகியில் ஒருவரும் என மொத்தம் 3 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர ஜிப்மர் ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சமூக விலகலை பொதுமக்கள் கடைபிடிப்பது அவசியம்.

திருக்கனூர் அடுத்த தமிழக பகுதியான ராதாபுரத்தில் 17 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் சென்னை கோயம்பேட்டில் இருந்து வந்துள்ளனர். எனவே நாம் விழிப்புடன் இருப்பது அவசியம். விழுப்புரம் மாவட்ட பகுதியில் இருந்து மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து பகுதிக்குள் நுழைய 21 சிறு வழிகள் உள்ளன. ஊரடங்கு தளர்த்தப்படும் நிலையில் அந்த வழிகளை மூட வேண்டும். இது தொடர்பாக அரசுக்கு தெரிவித்து உள்ளோம்.

இவ்வாறு இயக்குனர் மோகன் குமார் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com