ஐகுந்தம் கிராமத்தில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியங்கள் கண்டுபிடிப்பு

ஐகுந்தம் கிராமத்தில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஐகுந்தம் கிராமத்தில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியங்கள் கண்டுபிடிப்பு
Published on

பர்கூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா, ஐகுந்தம் கிராமத்தில் புலிக்குட்டை என்ற இடத்தில், 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய சிவப்பு, வெள்ளை நிறத்திலான ஓவியங்களை கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் வெங்கடேஸ்வரன் மற்றும் வரலாற்று ஆர்வலர் தகடூர் பார்த்தீபன் ஆகியோர் கண்டு பிடித்துள்ளனர். இது குறித்து பேராசிரியர் வெங்கடேஸ்வரன் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல அரிதான பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. இந்த ஓவியம் மனித இனத்தின் சூழலை சித்தரிப்பவையாக உள்ளன. தற்போது ஐகுந்தத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஓவியம், வெள்ளை மற்றும் சிவப்பு வண்ணங்களை கொண்டு தீட்டப்பட்டுள்ளது. இதில், உள்ள படகு காட்சி வணிகத்தை குறிப்பதாக விளங்குகிறது. இந்த ஓவியம் நான்கு காட்சிகளாகவும், முதல் காட்சியில், சிவப்பு நிறப்படகு ஒன்றில் எட்டு பேர் பயணம் செய்யும் காட்சி தீட்டப்பட்டுள்ளது. இதில், மனித உருவங்கள் முக்கோண வடிவில் உள்ளது.

சமூக பழக்க வழக்கங்கள்

இரண்டாவது காட்சியில், குதிரை மீது வீரன் ஒருவன் இடுப்பில் வாளுடன் குதிரையை செலுத்துவது போல் உள்ளது. மூன்றாவது காட்சியில், இரு மனித உருவங்களை சுற்றியும், சிவப்பு நிற புள்ளிகளால் வட்டமிடப்பட்டுள்ளது. இதுபோல் சிவப்பு நிற புள்ளியிட்டு காட்டப்படுவது சமூகத்தில் சிறந்த நிலையில் உள்ளவர்கள் அல்லது அவர்களின் உயர்ந்த நிலையை சுட்டிக்காட்டும் விதமான தாகும்.

நான்காவது காட்சியில், ஒரு கிளையில் மூன்று விலங்கு அல்லது பறவை உருவங்கள் இடம் பெற்றுள்ளன. படகில் வந்த நெய்தல் நில மக்கள், வணிகம் செய்ய இறங்கி வர, அவர்களை முல்லை நிலத்தினர் வரவேற்கும் விதமாக இக்காட்சி உள்ளது. மாவட்டத்தில் உள்ள பாறை ஓவியங்கள் மூலம், பெருங்கற்காலம் மற்றும் மத்திய கற்கால மனிதனுடைய பண்பாட்டினையும், சமூக பழக்க வழக்கங்களையும், நம்பிக்கைகளையும் அறிய முடிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com