

சேலம்,
பன்றிக்காய்ச்சலை தடுப்பது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியை சேலம் பழைய பஸ் நிலையத்தில் கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து விழிப்புணர்வு பிரசுரங்களை பஸ்களில் கலெக்டர் ஒட்டினார். மேலும், பயணிகளுக்கும் வழங்கினார்.
இதையடுத்து அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சலுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு வார்டுகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் ரோகிணி கூறியதாவது:- மாவட்டத்தில் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் காய்ச்சல் குறித்து அறிகுறிகள் தென்படும்போது ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லவேண்டும். டாக்டர் ஆலோசனையின்றி எந்த ஒரு மருந்துகளும் மருந்துக்கடைகளில் வாங்கி சாப்பிடக்கூடாது.
பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளான காய்ச்சல், குமட்டல் வாந்தி, இருமல், தொண்டை வலி, மிகுந்த உடம்பு வலி, உடல் சோர்வு, வயிற்று போக்கு, குளிர் நடுக்கம் அறிகுறிகள் இருந்தால் சாதாரண காய்ச்சல் என்று நினைக்கக்கூடாது. இவ்வாறு இருந்தால் அரசு ஆஸ்பத்திரிகளை அணுக வேண்டும். அது மட்டுமின்றி தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்களுக்கு பன்றிக்காய்ச்சலுக்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது என்ற பயிற்சி கொடுக்கப்பட்டு உள்ளது.
அரசு ஆஸ்பத்திரிகளில் பன்றிக்காய்ச்சல் மாத்திரைகள் தேவையான அளவிற்கு இருப்பில் உள்ளது. பொதுமக்கள் பன்றிக்காய்ச்சல் வராமல் இருக்க அடிக்கடி கைகழுவ வேண்டும். பள்ளி குழந்தைகள் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக ஆஸ்பத்திரியை அணுக வேண்டும். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் டாக்டரின் ஆலோசனைப்படி உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டு, பள்ளிகளில் உள்ள மற்ற குழந்தைகளுக்கு பரவாமல் தடுக்கவேண்டும்.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மிகவும் பாதுகாப்பாக இருக்கவேண்டும். தும்மல் வரும்போது கைக்குட்டையை வைத்து மற்றவர்களுக்கு பாதிக்காதவாறு தடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையின் மூலம் தயார் செய்யப்பட்டுள்ள பன்றிக்காய்ச்சல் துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சுகாதார கல்வி மாணவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஸ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி, மாநகர நலஅலுவலர் பார்த்திபன், உதவி கலெக்டர் (பயிற்சி) வந்தனா கார்க் உள்பட பலர் கலந்து கொண்டனர்.