ஜெயிலில் நடந்த தகராறால் கார் டிரைவர் அடித்துக் கொலை - கைதான வாலிபர் வாக்குமூலம்

வேலூர் மத்திய ஜெயிலில் இருந்தபோது நடந்த தகராறால் கார் டிரைவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார் என, கைதான வாலிபர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஜெயிலில் நடந்த தகராறால் கார் டிரைவர் அடித்துக் கொலை - கைதான வாலிபர் வாக்குமூலம்
Published on

காட்பாடி,

காட்பாடி காங்கேயநல்லூரில் இருந்து சத்துவாச்சாரிக்குச் செல்லும் பாலாற்றில் 25-ந்தேதி வேலூர் சைதாப்பேட்டை சின்னகவுண்டர் தெருவைச் சேர்ந்தவரும், கார் டிரைவருமான பிச்சைபெருமாள் (வயது 31) என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து விருதம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். நேற்று காட்பாடி இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் கொலை செய்யப்பட்ட பிச்சைபெருமாளின் உறவினர்கள், நண்பர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

பிச்சைபெருமாள் பயன்படுத்திய செல்போன் எண் மூலமாக, அவர் கடைசியாக யாருடன் பேசினார்? என்ற விவரங்களை சேகரித்தனர். அந்த எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வேலூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டன் (வயது 30) என்பவர் பேசியது தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரித்தபோது அவர், பிச்சைபெருமாளை கடத்திக் கொலை செய்ய நண்பர்களுக்கு ஆட்டோவை கொடுத்து உதவியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், மணிகண்டனை கைது செய்தனர்.

மணிகண்டன், போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலம் விவரம் வருமாறு:-

நானும், ரவுடிகள் யுவராஜ், பிரபு, ஜெயகாந்தன் ஆகியோரும் சங்கிலி பறிப்பு உள்ளிட்ட குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு, வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தோம். அப்போது ஜெயிலில் இருந்த பிச்சைபெருமாளுக்கும், எங்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஜெயிலில் இருந்து வெளியே வந்த உடன் எங்களை வெட்டிக் கொலை செய்து விடுவதாக பிச்சைபெருமாள் மிரட்டினார்.

அவர் விடுத்த கொலை மிரட்டலால் நாங்கள் பயந்தோம். அவர், எங்களை கொலை செய்வதற்குள், அவரை கொலை செய்ய வேண்டும் என்று நண்பர்கள் யுவராஜ், பிரபு, ஜெயகாந்தன் ஆகியோர் திட்டமிட்டனர். 3 பேரும் சேர்ந்து பிச்சைபெருமாளை கொலை செய்ய நான் ஆட்டோவை கொடுத்து உதவினேன். நான் கொடுத்து உதவிய ஆட்டோவில் எனது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து பிச்சைபெருமாளை கடத்திச் சென்று பாலாற்றில் வைத்து அவரை அடித்துக் கொலை செய்து விட்டு, ஆட்டோவை என்னிடம் திருப்பி கொடுத்து விட்டனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய பிரபு உள்பட 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com