போதைப்பொருள் விவகாரம்: நடிகை அன்ட்ரிதா ராய்-கணவருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் நோட்டீசு விசாரணைக்கு இன்று ஆஜராக உத்தரவு

போதைப்பொருள் விவகாரத்தில் இன்று(புதன்கிழமை) விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகை அன்ட்ரிதா ராய் மற்றும் அவரது கணவரும், நடிகருமான திகந்த் ஆகியோருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் நோட்டீசு அனுப்பி உள்ளனர்.
போதைப்பொருள் விவகாரம்: நடிகை அன்ட்ரிதா ராய்-கணவருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் நோட்டீசு விசாரணைக்கு இன்று ஆஜராக உத்தரவு
Published on

பெங்களூரு,

கன்னட திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்து உள்ளது. ஏற்கனவே நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் கன்னட திரையுலகில் போதைப்பொருட்கள் பயன்பாடு இருப்பதாக இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ், சமூக ஆர்வலர் பிரசாந்த் சம்பரகி ஆகியோர் குற்றச்சாட்டு கூறி இருந்தனர். இதனால் விசாரணைக்கு ஆஜராகி தெரிந்த தகவல்களை வழங்கும்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர்களுக்கு நோட்டீசு அனுப்பி இருந்தனர். அதன்பேரில் இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ், சமூக ஆர்வலர் பிரசாந்த் சம்பரகி ஆகியோர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜராகி, கன்னட திரையுலகினர் போதைப்பொருட்கள் பயன்படுத்துவது குறித்து விளக்கம் அளித்து இருந்தனர்.

இந்த நிலையில் கன்னட பிரபல நடிகை அன்ட்ரிதா ராய் வெளியிட்டு இருந்த ஒரு வீடியோவில் நான் இலங்கைக்கு செல்கிறேன். அங்கு நடைபெறும் விருந்து நிகழ்ச்சிக்கு என்னை அழைத்த சேக் பாசிலுக்கு நன்றி என்று கூறி இருந்தார். மேலும் அவர் இலங்கை சூதாட்ட விடுதியில் வைத்து சேக் பாசிலுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களும் வெளியானது. இதனால் போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை அன்ட்ரிதா ராய்க்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் இதை மறுத்த அன்ட்ரிதா ராய் இலங்கையில் விருந்து நிகழ்ச்சிக்கு செல்லவில்லை என்றும், விளம்பர படம் ஒன்றில் நடிக்கவே சென்றதாகவும் கூறி இருந்தார். மேலும் சேக் பாசிலை நான் சந்தித்ததே இல்லை என்று கூறிய அன்ட்ரிதா ராய், பெங்களூருவில் நடந்த ஒரு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அங்கு குழு புகைப்படம் எடுத்த போது எனது அருகே சேக் பாசில் நின்றார் என்றும் கூறி இருந்தார்.

ஆனாலும் போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை அன்ட்ரிதா ராய்க்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் போதைப்பொருள் விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகை அன்ட்ரிதா ராய் மற்றும் அவரது கணவரும், நடிகருமான திகந்த் ஆகியோருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் நோட்டீசு அனுப்பி உள்ளனர். அந்த நோட்டீசில் இன்று(புதன்கிழமை) காலை 11 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

அதன்படி பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு நடிகை அன்ட்ரிதா ராய், அவரது கணவரும், நடிகருமான திகந்த் ஆகியோர் இன்று ஆஜராகி விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்கு ஆஜராக நடிகை அன்ட்ரிதா ராய்க்கு நோட்டீசு அனுப்பப்பட்ட விவகாரம் கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com