குடிநீர் குழாய் திடீரென உடைந்து சாலையில் உருவான ராட்சத பள்ளம் வீடு, கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது

மணவாளக்குறிச்சியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அதிலிருந்து வெளியேறிய தண்ணீர் வீடு, கடைகளுக்குள் புகுந்தது. சாலையில் ராட்சத பள்ளம் உருவானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடிநீர் குழாய் திடீரென உடைந்து சாலையில் உருவான ராட்சத பள்ளம் வீடு, கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது
Published on

மணவாளக்குறிச்சி,

குழித்துறை காப்புக்காட்டில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் கன்னியாகுமரிக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக குழித்துறை, கருங்கல், திங்கள்நகர், மணவாளக்குறிச்சி, ராஜாக்கமங்கலம் வழியாக கன்னியாகுமரி வரை ராட்சத குழாய்கள் பூமிக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ளது.

இதில் பெரும்பாலான இடங்களில் சாலையின் நடுவில் குழாய்கள் செல்கிறது. இந்தநிலையில் நேற்று காலையில் மணவாளக்குறிச்சி சந்திப்பு சாலையில் பதிக்கப்பட்டிருந்த ராட்சத குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் இருந்து தண்ணீர் பீறிட்டு பல அடி உயரத்துக்கு எழும்பியபடி வெளியேறியது.

இந்த தண்ணீர் அருகில் இருந்த கடைகள், ஒரு வீட்டிற்குள் புகுந்தது. சாலையிலும் ஆறாக ஓடியது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அவர்கள் குடிநீர் வினியோகம் செய்வதை நிறுத்தினர். இந்த நடவடிக்கையால் குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் இருந்து தண்ணீர் வெளியேறியது நிறுத்தப்பட்டது.

அதே சமயத்தில் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியான சாலையில் பெரிய பள்ளம் உருவானது. சாலை உள்வாங்கியதை போன்று அந்த பள்ளம் காட்சி அளித்தது. நடுரோட்டில் திடீரென ராட்சத பள்ளம் உருவானதால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு மணவாளக்குறிச்சி சந்திப்பு சாலையில் ஒரு பகுதி வழியாக போக்குவரத்தை இயக்க போலீசார் ஏற்பாடு செய்தனர். இதற்கிடையே அதிகாரிகள் நடவடிக்கையின் பேரில் ஊழியர்கள் ராட்சத குழாய் உடைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணி இன்றும் (வியாழக்கிழமை) நடைபெறும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ராட்சத குடிநீர் பதிக்கப்பட்ட சாலைகளில் கனரக வாகனங்கள் அதிகமாக செல்லும் போது சில இடங்களில் குழாய்கள் சேதமடைந்து வருகிறது. இதனால் கனரக வாகனங்களை வேறு வழியாக இயக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com