கொரோனா பரவல் எதிரொலி: கறவை மாடுகளை பராமரிப்பவர்கள் கடைபிடிக்க வேண்டியவை

கொரோனா பரவல் எதிரொலியாக பண்ணையில் கறவை மாடுகளை பராமரிப்பவர்கள் கடைபிடிக்க வேண்டியவை என்னென்ன என்பது குறித்து அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கொரோனா பரவல் எதிரொலி: கறவை மாடுகளை பராமரிப்பவர்கள் கடைபிடிக்க வேண்டியவை
Published on

மதுரை,

கொரோனா நோயின் தாக்கம் பால் பண்ணையில் ஏற்படுவதை தடுக்கும் வகையில் கால்நடை விரிவாக்க கல்வி இயக்கம் சில அறிவுரைகளை வழங்கி உள்ளது. அதனை பண்ணையாளர்கள் கடைபிடிப்பதன் மூலம் நோய் தொற்று ஏற்படுவதை தடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

பண்ணையை தினமும் முறையான பண்ணை கழிவு மேலாண்மை முறைகளை பின்பற்றி சுத்தம் செய்து 1 சதவீத சோடியம் ஹைப்போ குளோரைட் கரைசலை தெளிக்க வேண்டும். பண்ணைக்குள் எந்த புதிய நபர்கள் வருவதையும் அனுமதிக்கக் கூடாது. பண்ணை நுழைவு வாசலில் கட்டாயம் கிருமிநாசினி தெளித்து வைக்க வேண்டும்.

பண்ணைக்குள் வரும் வேலையாட்கள், வாகன ஓட்டுனர்கள் போன்றவர்கள் தங்கள் கைகளை 0.125 சதவீதம் ஹைட்ரஜன் பெராக்சைடு கரைசல் அல்லது சோப்பால் கைகளை கழுவ வேண்டும். பண்ணை வேலையாட்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். பால் கறவை எந்திரங்களை சுத்தமாக சோப்பு மற்றும் தண்ணீரால் கழுவி வெயிலில் காய வைக்க வேண்டும்.

வெளியில் இருந்து வரும் பால்காரர்கள் ஆரோக்கியமாக உள்ளனரா? என்பதை பண்ணையாளர்கள் உறுதி செய்து கொள்வது அவசியம். அவர்கள் கைகளை சுத்தமாக சோப்பால் கழுவிய பின்னரே மாடுகளின் அருகில் செல்லவோ, பால் கறக்கவோ அனுமதிக்க வேண்டும்.

விவசாயிகள் பண்ணையில் இருந்து வெளியே பால் விற்பனைக்கோ, தீவனம் வாங்குவதற்கோ செல்லும் போது முககவசம் அணிய வேண்டும். விவசாயிகளின் வாகனங்கள், வெளி ஆட்கள் வரும் வாகனங்களையும், முக்கியமாக வாகன சக்கரங்களை கிருமிநாசினி கொண்டு கழுவ வேண்டும். பண்ணையில் எந்த இடத்திலும் எச்சில் துப்பக்கூடாது. இருமும் போதும், தும்மும் போதும் கைக்குட்டை கொண்டு மூக்கு மற்றும் வாயை மூடிக் கொள்ள வேண்டும்.

கறவை மாடுகளை பராமரிப்பவர்களுக்கு காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் பண்ணையில் எந்த இடங்களையும் தொடாமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும். இது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை கையாள்வதால் பண்ணையில் நோய் தொற்று ஏற்படுவதை தடுக்க முடியும். இவ்வாறு அந்த வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com