நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது நாராயணசாமி குற்றச்சாட்டு

பணமதிப்பிழப்பு, சரக்கு சேவை வரியினால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது நாராயணசாமி குற்றச்சாட்டு
Published on

புதுச்சேரி,

காந்தியின் நினைவு நாள் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் மாநில தலைவர் நமச்சிவாயம் தலைமையில் காந்தி படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

நாட்டிற்கு சுதந்திரம் வாங்கித்தந்த காந்தி கோட்சேவால் சுட்டுக்கொல்லப்பட்டார். நாட்டில் யார் நல்லது செய்கிறார்களோ அவர்களது உயிருக்கு குறிவைக்கப்படுகிறது. மகாத்மா காந்தி அகிம்சை வழியில் போராடி நாட்டிற்கு விடுதலை வாங்கி தந்தார். அவரது போராட்டங்களை பார்த்து உலக தலைவர்களே ஆச்சரியப்பட்டனர்.

போராட்டங்கள் என்றால் கலவரங்கள் நடக்கும். ஆனால் காந்தி தன்னை வருத்திக்கொண்டார். மதக்கலவரத்தை கண்டித்து வார்தாவில் 45 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அவர் நினைத்திருந்தால் இந்த நாட்டின் பிரதமராகி இருக்கலாம்.

சுதந்திரத்திற்காக உயிர்த்தியாகம் செய்தவர்கள் காங்கிரஸ் தலைவர்கள். ஆனால் பாரதீய ஜனதா கட்சியினர் காங்கிரசை ஒழிக்க கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறார்கள். காங்கிரஸ் கட்சியைப்போல் சுதந்திரத்திற்காக உயிர்தியாகம் செய்த கட்சி ஏதும் இல்லை. காந்தி பெற்றுத்தந்த சுதந்திரத்தின் விளைவாக அவரை சுட்டுக்கொன்றவர்களுக்கு சிலை வைக்கிறார்கள்.

சுதந்திரம் வேண்டாம் என்று கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தவர்கள் நாட்டை ஆளுகிறார்கள். ஆட்சியை இழந்தும் மக்களுக்காக பாடுபடுவது காங்கிரஸ் கட்சிதான். அதனால்தான் எந்த கொம்பனாலும் காங்கிரசை அசைக்க முடியாமல் உள்ளது. யார் மத்தியில் வந்தாலும் காங்கிரஸ் வரலாற்றை மாற்றி எழுத முடியாது.

பணமதிப்பிழப்பு, சரக்கு சேவை வரி வந்தபின் வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. பாரதீய ஜனதா மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது. அவர்கள் பேசுகிறார்களே தவிர மக்களுக்காக எதுவும் செய்யவில்லை.

நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் வல்சராஜ், காங்கிரஸ் நிர்வாகிகள் தேவதாஸ், கணேசன், இளையராஜா, சாம்ராஜ், பிரேமலதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com