10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர் கழகம் பங்கேற்கும்

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 9-ந்தேதி ஜாக்டோ நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் திரளாக பங்கேற்பது என பெரம்பலூரில் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர் கழகம் பங்கேற்கும்
Published on

பெரம்பலூர்,

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் அவசர மாநில செயற்குழு கூட்டம் பெரம்பலூரில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கி பேசினார். மாநில சிறப்பு தலைவர் சுப்ரமணியன், அப்பாசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-

10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அடுத்த மாதம் (ஜூன்) 9-ந்தேதி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ அமைப்பின் சார்பில், மாவட்ட தலை நகரங்களில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் திரளாக பங்கேற்க வேண்டும் என முடிவு செய்யப் படுகிறது.

சீர்த்திருத்தம் என்ற பெயரில் முதுகலை ஆசிரியர்களுக்கு 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் பாடவேளைகளை ஒதுக்கி பட்டதாரி ஆசிரியர்கள் உபரி என கணக்கீட்டு பணி நிரவல் செய்யும் முயற்சியை அரசு முழுமையாக கைவிட வேண்டும். ஆசிரியர் மாணவர்கள் விகிதத்தை 1:20 என்ற அளவில் நிர்ணயம் செய்து தேவையான கூடுதல் பட்டதாரி ஆசிரியர்களை அரசு நியமனம் செய்திட வேண்டும். 9, 10-ம் வகுப்புகளுக்கு அறிவியல் பாடங்களுக்கு செய்முறை பயிற்சிக்கு 7 பாட வேளைகளை ஒதுக்கி, அதனை இந்த கல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும்.

உதவி தொடக்க கல்வி அதிகாரி, வட்டார கல்வி அதிகாரிகளுக்கு தலைமை ஆசிரியர் பதவி 3 சதவீதம் வழங்கப்பட்டு வரும் நடைமுறையை உடனே ரத்து செய்து பட்டதாரி ஆசிரியர்களுக்கே உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும். காலியாக உள்ள உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். மாறுதல் கலந்தாய்வில் ஒரு ஆண்டு பணி முடித்து இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை நீக்கி, காலி பணியிடத்தை விரும்பியவர்கள் இதர நிபந்தனைகளுடன் நிரப்பிட அரசு உரிய திருத்தம் செய்து இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வேண்டும். தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கும் வகையிலும், அரசு பள்ளிகளை நசுக்கும் வகையிலும் 25 சதவீத மாணவர்களை ஆர்.டி.இ. சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் கட்டாயமாக சேர்க்க வேண்டுமென்றும், அதற்கான கட்டணத்தை அரசே செலுத்தும் என்றும் கடைபிடிக்கும் நடைமுறையை முற்றிலுமாக கைவிட வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பெரம்பலூர் மாவட்ட தலைவர் ராஜ்குமார் வரவேற்றார். முடிவில் செயலாளர் மணி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com