20 தொகுதிகளிலும் உடனே தேர்தல் நடத்த வேண்டும் சேலத்தில் இந்திய குடியரசு கட்சி தலைவர் பேட்டி

20 தொகுதிகளிலும் உடனே தேர்தல் நடத்த வேண்டும் என சேலத்தில் இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் தெரிவித்தார்.
20 தொகுதிகளிலும் உடனே தேர்தல் நடத்த வேண்டும் சேலத்தில் இந்திய குடியரசு கட்சி தலைவர் பேட்டி
Published on

சேலம்,

இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் நேற்று சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆத்தூரில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி ராஜலட்சுமியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினேன். இந்த சம்பவத்திற்கு இடதுசாரி தன்னார்வ அமைப்புகள் மட்டும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மற்ற அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவிக்கவில்லை. இந்த சம்பவ நடந்து ஒரு வாரம் கழித்தே கலெக்டர் சிறுமியின் குடும்பத்தை சந்திக்கிறார்.

தினேஷ்குமாரின் மனைவி மற்றும் சிலர் இன்னும் கைது செய்யப்படவில்லை. காவல்துறை மெத்தனப்போக்குடன் செயல்படுகிறது. முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் யாரும் சிறுமியின் குடும்பத்தினரை சந்திக்கவில்லை. பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு 5 ஏக்கர் நிலம், 3 மாத காலத்திற்குள் அந்த குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை, ரூ.25 லட்சம் அல்லது ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

பாராளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்தக்கூடாது. வளர்ந்த நாடுகளில் இன்னும் வாக்கு சீட்டு முறை தான் உள்ளது. அதேபோல் வாக்கு சீட்டு முறையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மதவாத ஆதிக்க சக்தி, முதலாளித்துவம் இல்லாதவர்கள் உடன் கூட்டணி வைக்கப்படும். 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். மாநில அரசு தலித் மக்களுக்கு எதிராக செயல்படுகிறது.

சர்கார் பட விவகாரம் கருத்துரிமையை சார்ந்தது. ஏழைகளுக்கு உதவிடும் வகையில் நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. விலையில்லா திட்டத்தை விமர்சிப்பது ஏழை, எளிய மக்களை கொச்சைப்படுத்துவதாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின் போது கொள்கை பரப்பு செயலாளர் மங்கப்பிள்ளை, மத்திய மாவட்ட தலைவர் ஜெபஸ்டின், கிழக்கு மாவட்ட தலைவர் பழனிசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com