

திண்டிவனம்,
திண்டிவனத்தில் உள்ள செஞ்சி பேருந்து நிறுத்தம் அருகே இருபுறமும் சாலையை ஆக்கிரமித்து சிலர் போக்குவரத்துக்கு இடையூறாக காய்கறி, இனிப்பகம், பழக்கடை உள்ளிட்ட கடைகளை வைத்து வியாபாரம் செய்து வந்தனர். இதனால் அந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதில் பாதிக்கப்பட்ட மக்கள் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.
அதன்பேரில் நகராட்சி ஆணையாளர் ஸ்ரீபிரகாஷ் தலைமையிலான அதிகாரிகள், சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைத்திருந்த வியாபாரிகளை சந்தித்து, 3 நாட்களுக்குள் தாங்களாகவே ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிக் கொள்ளவேண்டும். இல்லையென்றால் நகராட்சி நிர்வாகம் சார்பில் அகற்றப்படும் என்று கூறினர்.
இந்த நிலையில் 3 நாட்கள் கால அவகாசம் கொடுத்தும் ஆக்கிரமிப்பாளர்கள் கடைகளை அகற்றவில்லை. இதனால் நகராட்சி ஆணையாளர் ஸ்ரீபிரகாஷ் தலைமையிலான அதிகாரிகள் நேற்று காலை சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். மேலும் திண்டிவனம் நகர சாலைகளை ஆக்கிரமித்து, கடைகள் நடத்தினால் சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் கடைகள் அமைக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.