விவசாயியிடம் ரூ.5 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் 8 பேர் கைது; கார் பறிமுதல்

‘சஞ்சீவி வேர்’ தருவதாக கூறி விவசாயியிடம் ரூ.5 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது.
விவசாயியிடம் ரூ.5 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் 8 பேர் கைது; கார் பறிமுதல்
Published on

கடத்தூர்,

நாமக்கல் மாவட்டம் பச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 54). விவசாயி. சம்பவத்தன்று ராஜசேகரை சங்ககிரியை சேர்ந்த முருகன் (45) என்பவர் சந்தித்தார். அப்போது முருகன் தனக்கு தெரிந்தவர்களிடம் சஞ்சீவி வேர் உள்ளது. அந்த வேரை வாங்கி வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும். எனவே பணம் கொடுத்தால் அந்த வேரை வாங்கி தருவதாக கூறினார். மேலும் ஈரோடு மாவட்டம் கோபியில் மின்மயானம் அருகே உள்ள தடப்பள்ளி வாய்க்கால் பாலம் பகுதிக்கு வந்தால் சஞ்சீவி வேரை பெற்றுக்கொள்ளலாம் என்றும் முருகன் கூறியதாக தெரிகிறது.

இதை நம்பிய ராஜசேகர் நேற்று முன்தினம் கோபி மின்மயானம் அருகே உள்ள தடப்பள்ளி வாய்க்கால் பகுதிக்கு சென்றார். அப்போது முருகன் உள்பட 8 பேர் ஒரு காரில் வந்து அங்கு நின்று கொண்டு இருந்தனர். உடனே அவர்களின் அருகில் ராஜசேகர் சென்றார். அப்போது ராஜசேகரிடம் எவ்வளவு பணம் கொண்டு வந்து உள்ளர்கள் என்று முருகன் கேட்டு உள்ளார்.

ஆனால் தான் பணம் எதுவும் எடுத்து வரவில்லை என்றும், சஞ்சீவி வேரை பார்த்து விட்டு பணம் தருவதாகவும் ராஜசேகர் கூறினார். உடனே முருகன் அருகில் நின்று கொண்டு இருந்தவர்கள், நாங்கள் சொல்லும் இடத்துக்கு ரூ.5 லட்சத்துடன் வந்து சஞ்சீவி வேரை வாங்கி செல்ல வேண்டும் எனவும், இதை யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவதாகவும் ராஜசேகருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் பயந்துபோன ராஜசேகர் இதுகுறித்து கோபி போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சஞ்சீவி வேர் தருவதாக கூறி ரூ.5 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக முருகன், கோபி புதுப்பாளையத்தை சேர்ந்த பிஜூ, மொடச்சூரை சேர்ந்த மணி, நாமக்கல்லை சேர்ந்த நூர்முகமது, இதயத்துல்லா, சத்தியமங்கலம் அருகே உள்ள திம்மையன்புதூரை சேர்ந்த சுந்தரபாண்டி, லோகு, திருப்பூரை சேர்ந்த கார்த்திக் ஆகிய 8 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com