கதவணை கட்டக்கோரி கருப்புக்கொடியுடன் விவசாயிகள் சாலை மறியல்

காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டக்கோரி கருப்புக்கொடியுடன் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் முட்டத்தில் 2½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கதவணை கட்டக்கோரி கருப்புக்கொடியுடன் விவசாயிகள் சாலை மறியல்
Published on

காட்டுமன்னார்கோவில்,

மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதியான கீழணைக்கு வருகிறது. இங்கிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கும், உபரி நீர் கொள்ளிடம் ஆற்றிலும் திறக்கப்படுகிறது. வடவாற்றில் திறக்கப்படும் நீர், வீராணம் ஏரியில் சேமித்து வைக்கப்படுகிறது. ஆனால் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படும் உபரி நீர் கடலில் கலக்கிறது. ஏனென்றால் அதனை சேமித்து வைக்க கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அணை இல்லை. தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க கதவணை கட்ட வேண்டும் என்று கொள்ளிடம், கீழணை பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபையில் 110 விதியின் கீழ் கடலூர் மாவட்டம் மா.ஆதனூர் கிராமத்துக்கும், நாகை மாவட்டம் குமாரமங்கலம் கிராமத்துக்கும் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுகே ரூ.400 கோடியில் கதவணை கட்டப்படும் என்று அறிவித்தார். ஆனால் 4 ஆண்டுகள் ஆகியும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை கட்டவில்லை. இதனால் கொள்ளிடத்தில் திறந்து விடப்படும் உபரி நீர், வீணாக கடலில் கலப்பது தொடர் கதையாகவே உள்ளது. மழைக்காலங்களிலும் கிழணையில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீர், கொள்ளிடம் ஆறு வழியாக கடலில் கலக்கிறது.

கடந்த 19-ந் தேதி மேட்டூர் அணையில் திறந்து விடப்பட்ட நீர் கடந்த 26-ந் தேதி இரவு கீழணையை வந்தடைந்தது. 3 மணி நேரத்தில் கீழணை தனது முழு கொள்ளளவான 9 அடியை எட்டியது. இதையடுத்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 2,200 கன அடி நீரும், உபரி நீராக வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் கொள்ளிடம் ஆற்றிலும் திறந்து விடப்பட்டது.

கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்ட உபரி நீர், முட்டம், வல்லம்படுகை, வேளக்குடி வழியாக கொடியம்பாளையத்தில் உள்ள கடலில் வீணாக கலக்கிறது. இதனை பார்த்து விவசாயிகள் மனவேதனை அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கொள்ளிடம், கீழணை பாசன விவசாயிகள் நேற்று காலையில் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள முட்டத்தில் ஒன்று திரண்டனர். பின்னர் காலை 10.30 மணி அளவில் கருப்புக்கொடியுடன் விவசாயிகள் ஊர்வலமாக சென்று, முட்டத்தில் உள்ள மேம்பாலத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு கொள்ளிடம், கீழணை பாசன சங்க தலைவர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார்.

இதில் கலந்து கொண்ட விவசாயிகள், சட்டசபையில் அறிவித்தபடி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.400 கோடியில் கதவணை கட்டக்கோரியும், கொள்ளிடம், கீழணை, வீராணம் ஏரி பாசன வாய்க்கால்களை போர்க்கால அடிப்படை தூர்வாரக்கோரியும் கோஷமிட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் காட்டுமன்னார்கோவில் போலீசார் விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகளும், சிதம்பரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன் ஆகியோர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், அதுவரையிலும் போராட்டத்தை கைவிடமாட்டோம் என்றும் கூறினர்.

இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும், சிதம்பரம் கோட்டாட்சியருக்கும் செல்போன் மூலம் போலீசார் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் முத்துக்குமார் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விவசாயிகள், சிதம்பரம் கோட்டாட்சியர் ராஜேந்திரனும் நேரில் வர வேண்டும் என்று கூறினர். இதையடுத்து சிதம்பரம் கோட்டாட்சியர் ராஜேந்திரனை மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது கோட்டாட்சியர் ராஜேந்திரன், இது தொடர்பாக வருகிற புதன்கிழமை(1-ந் தேதி) சிதம்பரம் தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என்று கூறினார். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் மதியம் 1 மணிக்கு முடிவடைந்தது.

விவசாயிகளின் 2 மணி நேர போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மேம்பாலத்தின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அந்த சமயத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் நிழலுக்காக லாரியின் அடிப்பகுதியில் அமர்ந்து இருந்ததை காணமுடிந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com