மத்திய அரசு தொடர்ந்து பழிவாங்கும் அரசியல் செய்கிறது - தேவேகவுடா குற்றச்சாட்டு

ஆட்சி, அதிகாரம் யாருக்கும் நிரந்தரம் இல்லை என்றும், மத்திய அரசு தொடர்ந்து பழிவாங்கும் அரசியல் செய்வதாகவும் தேவேகவுடா குற்றம்சாட்டி உள்ளார்.
மத்திய அரசு தொடர்ந்து பழிவாங்கும் அரசியல் செய்கிறது - தேவேகவுடா குற்றச்சாட்டு
Published on

பெங்களூரு,

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலையில் டி.கே.சுரேஷ் எம்.பி. நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு தேவேகவுடா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஆட்சி, அதிகாரம் யாருக்கும் நிரந்தரமல்ல. இதை ஆட்சி நடத்துபவர்கள் மறக்கக் கூடாது. திகார் சிறையில் இருக்கும் டி.கே.சிவக்குமாரை சந்திக்க நான் முயற்சி செய்தேன். ஆனால் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. அவரை சந்திக்கும் நோக்கத்திலேயே நான் டெல்லிக்கு வந்தேன். 2 நாட்களுக்கு முன்பே அனுமதி பெற வேண்டும் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதனால் டி.கே.சிவக்குமாரை சந்திக்க முடியவில்லை.

நான் கோவிலுக்கு சென்று பூஜைகள் செய்தேன். டி.கே.சிவக்குமாருக்கு ஜாமீன் கிடைக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொண்டேன். அவர் ஜாமீனில் இன்று(அதாவது நேற்று) விடுதலையாவார் என்று நம்புகிறேன். மத்திய பா.ஜனதா அரசு தொடர்ந்து பழிவாங்கும் அரசியல் செய்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசு எப்படி நடந்து கொள்கிறது என்பதை நான் சொல்ல தேவை இல்லை. இது அனைவருக்கும் தெரியும். இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

டி.கே.சுரேஷ் எம்.பி. கூறுகையில், எனது சகோதரர் டி.கே.சிவக்குமாரை சந்தித்து பேச தேவேகவுடா, எச்.டி.ரேவண்ணா ஆகியோர் டெல்லி வந்தனர். ஆனால் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியும் செல்போன் மூலம் பேசினார். டி.கே.சிவக்குமாருக்கு இன்று (அதாவது நேற்று) ஜாமீன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com