மத்திய அரசு பட்டாசு தொழிலை நசுக்குகிறது - கி.வீரமணி குற்றச்சாட்டு

மத்திய அரசு பட்டாசு தொழிலை நசுக்கி வருகிறது என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார்.
மத்திய அரசு பட்டாசு தொழிலை நசுக்குகிறது - கி.வீரமணி குற்றச்சாட்டு
Published on

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டையில் திராவிடர் கழகம் சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஆனந்தம் தலைமை வகித்தார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

125 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா 2 கோடி ராணுவ வீரர்களை நம்பித்தான் இருக்கிறது. அதைப்போல கருப்பு சட்டை படை எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் இது தான் இனத்தை, மொழியை, பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை காப்பாற்றுகிறது. இந்த நாட்டுக்கு எந்த அரசியல் சூழல் வந்தாலும் அதற்கு அடித்தளம் உருவாக்கிய ஒரே தலைவர் பெரியார். எல்லோரும் பதவிகளுக்காக பல்வேறு கட்சிகளுக்கு போவார்கள். அன்றைய காலக் கட்டத்தில் 27 பதவிகளை வகித்தபோதும் அதனை ஒரே நாளில் ராஜினாமா செய்து விட்டு பொது வாழ்க்கைக்கு வந்து மானமும், அறிவும் உள்ள மக்களாக ஆக்கி காட்டியவர் பெரியார்.

தமிழ்நாட்டை அடிப்படையிலேயே மாற்ற வேண்டும் என்பதே பாரதீய ஜனதா கட்சியின் திட்டம். மத்தியில் ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொருவருக்கும் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் போடுவோம் என்று கூறினார்கள். இது நாள் வரை யாருக்கும் பணம் வந்து சேரவில்லை. இந்து மதத்தில் மட்டுமே சாதி உள்ளது. வேறு எந்த மதத்திலும் சாதி இல்லை.

அரசியல் சட்டத்தை எடுத்து விட்டு மனுதர்ம கொள்கையை கொண்டு வர முயற்சிக்கிறார்கள். இது பெரியார் மண்ணல்ல, பெரியாழ்வார் மண், ஆண்டாள் மண் என்று பொய் சொல்கிறார்கள். பி.ஜே.பி. ஆட்சி சொந்த காலில் இல்லை. மிஸ்டு காலில் தான் ஆட்சி நடைபெறுகிறது. பெரியார் மண்ணை ஒரு போதும் மாற்ற முடியாது. நீட் தேர்விற்கு எதிராக சட்டசபையில் மசோதா தாக்கல் செய்து அனுப்பியும் தமிழ்நாட்டிற்கு விதி விலக்கு அளிக்கவில்லை. இதனால் நடுத்தர ஏழை மக்களின் டாக்டர் கனவு பலிக்காது.

கடலை மிட்டாய்க்கு 18 சதவீதம் வரி விதித்துள்ளனர். பட்டாசு தொழிலை நசுக்கி வருகின்றனர். மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி நடத்தவில்லை. காட்சி தான் நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com