மாணவிகளின் உடல்களை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ்களை மறித்து போராட்டம்

பிரேத பரிசோதனை முடிந்து 4 மாணவிகளின் உடல்களை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ்களை கிராம மக்கள், உறவினர்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் நடந்த மாணவிகளின் இறுதி ஊர்வலத்தில் பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
மாணவிகளின் உடல்களை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ்களை மறித்து போராட்டம்
Published on

பனப்பாக்கம்,

தற்கொலை செய்து கொண்ட 4 மாணவிகளின் உடல்கள் நேற்று வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் இறுதி சடங்கிற்காக அவர்களின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்ல போலீசார் ஏற்பாடு செய்திருந்தனர். அதன்படி தனித்தனி ஆம்புலன்ஸ்களில் 4 மாணவிகளின் உடல்களும் ஏற்றப்பட்டது. ஆம்புலன்சுகள், போலீஸ் ஜீப்கள், அதிவிரைவுப்படை வாகனம் மற்றும் உறவினர்கள் சென்ற ஜீப் உள்பட மொத்தம் 12 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்றது. வேலூரில் இருந்து மாணவிகளின் உறவினர்கள் அமர்ந்து சென்ற ஜீப் முதலிலும் பின்னர் போலீசார் 2 ஜீப்களிலும் அடுக்கம்பாறையில் இருந்து பனப்பாக்கம் நோக்கி ஓச்சேரி வழியாக செல்ல முடிவு செய்து புறப்பட்டு சென்றனர்.

இதனிடையே பனப்பாக்கம் அருகே மாணவிகளின் உறவினர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், புரட்சி பாரதம் கட்சியினர் ஆம்புலன்ஸ்களை மறித்து போராட்டம் நடத்த தயாராக உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேலும், ஆம்புலன்ஸ் வரும் தகவல் குறித்து முன்னே ஜீப்பில் செல்லும் மாணவிகளின் உறவினர்கள் கிராம மக்களுக்கு தகவல் கொடுப்பது போலீசாருக்கு தெரிய வந்தது.

இதையறிந்த போலீசார் முன்னே ஜீப்பில் சென்ற உறவினர்களை திசை திருப்பி வேறு வழியாக மாணவிகளின் உடல்களை சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். அதன்படி வாலாஜா டோல்கேட் அருகே சென்றபோது மாணவிகளின் உறவினர்கள் சென்ற ஜீப்பின் பின்னால் 2 போலீஸ் ஜீப் பின் தொடர்ந்து சென்றது. ஆம்புலன்ஸ் மற்றும் இதர போலீஸ் வாகனங்கள் பொன்னப்பந்தாங்கல் வழியாக பனப்பாக்கம் நோக்கி சென்றன.

தாங்கள் திசைதிருப்பப்பட்டதை அறிந்த உறவினர்கள் தங்களது கிராம மக்களுக்கு இதுதொடர்பாக தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கிராம மக்கள், விடுதலை சிறுத்தைகள் மற்றும் புரட்சி பாரதம் கட்சியினர் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பனப்பாக்கம் சுடுகாடு அருகே திரண்டனர்.

அவர்கள் பனப்பாக்கத்தில் இருந்து ஓச்சேரி செல்லும் சாலை - பனப்பாக்கத்தில் இருந்து பொன்னபந்தாங்கல் செல்லும் சாலை சந்திப்புக்கு வந்தனர். அங்கு வந்த ஆம்புலன்ஸ்சுகளை அவர்கள் திடீரென மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பும் பதற்றமும் நிலவியது.

மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. மேலும் அங்கு நெமிலி, காவேரிப்பாக்கம், அவளூர், பாணாவரம் போலீஸ் நிலைய போலீசார் மற்றும் அதிவிரைவுப்படை போலீசார் என குவிக்கப்பட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் அப்துல் முனீர், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் குத்தாலிங்கம், விஜயகுமார், தாசில்தார்கள் பாஸ்கரன், ராஜசேகரன், தனித்துணை தாசில்தார்கள் ஜெயந்தி, ராஜசேகர் உள்பட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மாணவிகளின் உறவினர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்தனர். அதில் இறந்த மாணவிகளின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு, 2 ஏக்கர் நிலம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மேலும் தலைமை ஆசிரியை மற்றும் வகுப்பு ஆசிரியை ஆகியோரை நிரந்தர பணிநீக்கம் செய்ய வேண்டும். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றனர்.

அதிகாரிகள் கூறுகையில், இது குறித்து கலெக்டருக்கு தெரிவிக்கப்படும். அவர், இது தொடர்பாக தமிழக அரசுக்கு பரிந்துரை செய்வதை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதை தொடர்ந்து சமரசம் ஏற்பட்டது. இதனால் 1 மணி நேரமாக நடத்திய சாலைமறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

இதைத்தொடர்ந்து தீபா, ரேவதி உடல்கள் அண்ணாநகர் பகுதிக்கும், மனிஷா, சங்கரி உடல்கள் காஞ்சீபுரம் ரோட்டு தெருவிற்கும் கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன. இதில் சுற்று வட்டாரப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் மாணவிகளின் உடல்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

அரக்கோணம் எம்.எல்.ஏ. சு.ரவி மாணவிகளின் உடல்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அவர் நிருபர்களிடம் கூறுகையில், 4 மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. பெற்றோரின் கோரிக்கைகள் அரசுக்கு பரிந்துரைக்கப்படும். நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியும் மாணவிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். அவர் கூறுகையில், தற்கொலைக்கு காரணமான ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு தீவிர விசாரணை நடத்த வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றார்.

இதையடுத்து பனப்பாக்கம் சுடுகாட்டிற்கு தீபா, ரேவதி உடல்கள் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. காஞ்சீபுரம் காலனி பகுதி சுடுகாட்டில் மனிஷாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. சங்கரியின் உடல் புதைக்கப்பட்டது.

இறுதி சடங்குகள் நடந்தபோது சுடுகாட்டிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் வந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

முன்னதாக மாணவிகளின் உடல்களை ஊர்வலமாக சுடுகாட்டிற்கு கொண்டு சென்ற போது கிராம மக்கள் பலர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய காட்சி அங்கு நின்றவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com