நாட்டுப்படகு மீனவர்களுக்கு தாமதமின்றி நிவாரணம் வழங்க கோரி ஒப்பாரி வைத்து போராட்டம்

கஜா புயலால் நாட்டுப்படகுகளை இழந்த மீனவர்களுக்கு தாமதமின்றி நிவாரணம் வழங்க கோரி ஒப்பாரி வைத்து போராட்டம் நடை பெற்றது.
நாட்டுப்படகு மீனவர்களுக்கு தாமதமின்றி நிவாரணம் வழங்க கோரி ஒப்பாரி வைத்து போராட்டம்
Published on

சேதுபாவாசத்திரம்,

கஜா புயலில் சிக்கி தஞ்சை மாவட்ட மீனவ கிராமங்களில் ஏராளமான விசைப்படகுகள், மற்றும் நாட்டுப்படகுகள் சேதமடைந்தன. மேலும் மீனவர்களின் வாழ்வாதார கருவிகளான வலைகள், ஐஸ்பெட்டி, உள்ளிட்ட பொருட் களும் சேதம் அடைந்தது.

புயலால் நாட்டு படகுகளை இழந்த மீனவர்களுக்கு தாமதம் இன்றி நிவாரண உதவி வழங்க கோரி சேதுபாவா சத்திரம் அருகே உள்ள கழுமங்குடா கிராமத்தில் சேதமடைந்த படகுகளின் முன்பு நின்று, மீனவர்கள், மீனவப் பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர் மாவட்ட மீன்பிடி தொழிலாளர் சங்கத்தின் (சி.ஐ.டி.யூ.) மாவட்ட செயலாளர் எஸ்.சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் பி.பெரியண்ணன், மாவட்டக்குழு நாகேந்திரன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் முழுமையாக சேதமடைந்த நாட்டுப்படகுகளுக்கு ரூ.85 ஆயிரமும், பகுதி சேதமடைந்த படகுகளுக்கு ரூ.35 ஆயிரமும் அரசு சார்பில் வழங்கப்படுகிறது. நாட்டுப்படகுகள் வாங்க ரூ.3 லட்சம் செலவாகிறது. எனவே அரசு வழங்கும் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.

மேலும் படகை காட்டினால் மட்டுமே நிவாரண தொகை வழங்க முடியும் என அதிகாரிகள் கூறுகிறார்கள். இவ்வாறு மீனவர்களை நிர்பந்திக்காமல், முழு நிவாரணத் தொகையையும், பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும். நாட்டுப் படகுகளை இழந்த மீனவர்களுக்கு தாமதமின்றி நிவாரணம் வழங்க வேண்டும், இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com