காரில் கடத்தப்பட்ட ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் மீட்பு; 4 பேர் கைது

பணத்தகராறில் காரில் கடத்தப்பட்ட ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த நிதி நிறுவன அதிபரை காரில் கடத்திய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
காரில் கடத்தப்பட்ட ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் மீட்பு; 4 பேர் கைது
Published on

மூலனூர்,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அத்தப்பம்பட்டியை சேர்ந்தவர் பிச்சைமுத்து (வயது 60). இவர், கோவை காந்திபுரம் அலமுநகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பிச்சைமுத்து மற்றும் ஒட்டன்சத்திரம் காளஸ்வரன் நகரை சேர்ந்த செல்வம் (46) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ராமசாமி ஆகியோர் சேர்ந்து மும்பை மற்றும் மங்களூருவில் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக நிதிநிறுவனத்தில் இருந்து பிச்சைமுத்துவை அவர்கள் 2 பேரும் சேர்ந்து நீக்கியதாக தெரிகிறது. ஆனால் அவர்களுக்கு சேர வேண்டிய பங்கு தொகை பிச்சைமுத்துவிடம் இருந்தது. அதை அவர்கள் இருவரும் பலமுறை கேட்டும் பிச்சைமுத்து கொடுக்காமல் காலம் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி பிச்சைமுத்து திருப்பூர் மாவட்டம் மூலனூரில் நடந்த உறவினர் திருமணத்தில் கலந்துகொள்ள ஒரு காரில் வந்தார். பின்னர் அங்கு திருமணம் முடிந்ததும் கோவைக்கு புறப்பட்டார். அப்போது பிச்சைமுத்துவின் உறவினரான அந்த பகுதியை சேர்ந்த குப்புசாமி என்பவர் தாராபுரம் வரை காரில் வருவதாக கூறி ஏறிக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து மூலனூரில் இருந்து கார் கோவை நோக்கி புறப்பட்டது. காரை கோவையை சேர்ந்த செந்தில்குமார் (45) என்பவர் ஓட்டினார். கரூர்-தாராபுரம் சாலையில் மூலனூரை அடுத்த சென்னாக்கல் வலசு பிரிவு அருகே கார் சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிரே மற்றொரு காரில் வந்த ஒரு கும்பல் இவர்கள் காரின் குறுக்காக தங்கள் காரை நிறுத்தினர். பின்னர் அந்த காரில் இருந்து இறங்கி வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் பிச்சைமுத்துவை மட்டும் தாங்கள் வந்த காரில் ஏற்றினர். அத்துடன் குப்புசாமியிடம் இருந்த செல்போனையும், காரின் சாவியையும் எடுத்துக்கொண்டு அந்த கும்பல் பிச்சைமுத்துவை கடத்திச்சென்றது.

இது குறித்து குப்புசாமியும், செந்தில்குமாரும் மூலனூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் செய்தனர். அதைத்தொடர்ந்து மூலனூர் போலீசார் மர்ம ஆசாமிகள் சென்ற காரின் பதிவுஎண் மற்றும் காரின் நிறம் குறித்து அனைத்து சோதனைச்சாவடிகளுக்கும், போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்தனர். மேலும் தனிப்படையினர் பிச்சைமுத்துவை கடத்திச்சென்ற 4 பேர் கொண்ட கும்பலை தீவிரமாக தேடிவந்தனர். மேலும் ஆங்காங்கே வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மூலனூர் அருகே மார்க்கம்பட்டி - கரூர் சாலையில் உள்ள கம்மங்கரை என்ற இடத்தில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் இருந்த பிச்சைமுத்துவை போலீசார் மீட்டனர். அத்துடன் பிச்சைமுத்துவை காரில் கடத்தியதாக ஒட்டன்சத்திரம் காளஸ்வரன் நகரை சேர்ந்த செல்வம், மதுரை உசிலம்பட்டி பாறப்பட்டியை சேர்ந்த ராஜவடிவேல் (23), உத்தமநாயக்கனூரை சேர்ந்த ஜெயம் (49), கம்பம் சுருளிப்பட்டியை சேர்ந்த ஜெயக்குமார் (34) ஆகிய 4 பேரை கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com