

எடப்பாடி,
சேலம் மாவட்டம் எடப்பாடிக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை வந்தார். எடப்பாடியில் உள்ள ஆய்வு மாளிகைக்கு வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
அந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அப்போது மாவட்ட கலெக்டர் ரோகிணி, எடப்பாடி முன்னாள் நகரசபை தலைவர் கதிரேசன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கரட்டூர் மணி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் மாதேஸ்வரன்(எடப்பாடி), ராஜேந்திரன்(கொங்கணாபுரம்), எடப்பாடி நகர செயலாளர் ராமன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
பின்னர் முதல்-அமைச்சர் கோணமேவிமேடு பகுதியில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கு சென்றார். அந்த கல்லூரிக்கு புதிய வகுப்பறை கட்டிடம், ஆய்வக கட்டிடம் கட்ட ரூ.2 கோடியே 97 லட்சமும், கல்லூரிக்கு சுற்றுச்சுவர் ரூ.82 லட்சம் மதிப்பீட்டில் கட்டவும் நிதி ஒதுக்கீடு செய்த முதல்-அமைச்சருக்கு கல்லூரி மாணவ, மாணவிகள் நன்றி தெரிவித்து மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில், எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
இளைஞர்களுக்கு கல்விக்கற்கும் காலமே பொற்காலம். மாணவர்களுக்கு எந்த காலத்திலும் அழியா செல்வம் கல்விச்செல்வம். நமது எடப்பாடி தொகுதிக்கு அரசு கல்லூரி வேண்டும் என்று நாம் கோரிக்கை வைத்தவுடன், அந்த கோரிக்கையை ஏற்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா புதிய கல்லூரியை நமக்கு உடனடியாக கட்டி கொடுத்தார்.
எடப்பாடி தொகுதிக்கு கடந்த முறை நான் வந்தபோது, இந்த கல்லூரிக்கு கூடுதல் வகுப்பறை, ஆய்வகம், சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும் என்று கல்லூரி மாணவர்களும், பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று, ரூ.3.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளேன். இந்த பணிகள் விரைவில் தொடங்கப்படும். மேலும் கல்லூரி அருகே சாலையை சீரமைக்க ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதைத்தொடர்ந்து அவரது சொந்த ஊரான சிலுவம்பாளையத்திற்கு வரும் வழியில் வெள்ளரிவெள்ளியில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் பேசும் போது, இந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்காக வாய்க்காலில் இருந்து குழாய் மூலம் ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் முடிந்துள்ளன. விரைவில் மேட்டூர் கிழக்கு, மேற்கு கரை கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்படும் போது, வெள்ளரி வெள்ளி ஏரிக்கு தண்ணீர் நிரப்பப்படும். இதனால் இந்த பகுதியில் விவசாயம் செழித்தோங்கும் என்றார்.
பின்னர் சொந்த ஊருக்கு வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சிலுவம்பாளையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆரத்தி எடுத்து மேளதாளங்கள் முழங்க வரவேற்றனர். பின்னர் முதல்-அமைச்சர் தனது குடும்பத்துடன், வீட்டுக்கு அருகே உள்ள தனது குலதெய்வமான முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டார்.
எடப்பாடியில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு 10.20 மணிக்கு சேலம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தார். அப்போது, அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ஜி.வெங்கடாசலம் முதல்-அமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இதையடுத்து பன்னீர்செல்வம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சக்திவேல், வெற்றிவேல், சேலம் மாநகராட்சி முன்னாள் மேயர் சவுண்டப்பன் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள், கூட்டுறவு வங்கி தலைவர்கள் உள்பட பலர் முதல்- அமைச்சருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.