

குளச்சல்,
குமரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 30-ந் தேதி அதிகாலையில் வீசிய ஒகி புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்த ஏராளமான மீனவர்கள் புயலில் சிக்கி கடலில் மாயமானார்கள். அவர்களில் சிலரது உடல்கள் கேரளாவில் கரை ஒதுங்கின. இன்னும் நூற்றுக்கணக்கான மீனவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.
கேரள கடற்கரையில் கரை ஒதுங்கிய உடல்கள் மரபணு (டி.என்.ஏ.) பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
மீனவர்கள் வலையில் உடல்
இந்தநிலையில், குளச்சல் பகுதியை சேர்ந்த 11 மீனவர்கள் கடந்த 12-ந் தேதி கரையில் இருந்து 30 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அவர்களது வலையில் அழுகிய நிலையில் ஆண் உடல் சிக்கியது. அந்த உடலை மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த உடலை கைப்பற்றி நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அடையாளம் தெரிந்தது
தொடர்ந்து, டி.என்.ஏ. பரிசோதனை மூலம் அடையாளம் காணும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, பிணமாக சிக்கியவர் உத்தரபிரதேசம் மாநிலம் திசந்தா பகுதியை சேர்ந்த கோரிலால் (வயது 25), என்பது தெரிய வந்தது. மீன்பிடி தொழிலாளியான இவர் கேரளாவில் இருந்து கடலுக்கு சென்ற போது ஒகி புயலில் சிக்கி பலியாகியுள்ளார்.
இதைத்தொடர்ந்து மீனவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.