கேரள மாநிலம்: ரூ.47 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் அனுப்பப்பட்டது

கேரள மாநிலத்துக்கு 2-ம் கட்டமாக ரூ.47¼ லட்சம் மதிப்பிலான வெள்ளி நிவாரண பொருட்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
கேரள மாநிலம்: ரூ.47 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் அனுப்பப்பட்டது
Published on

திருவண்ணாமலை,

கேரள மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக அதிகமான சேதங்களும், உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளன. இதனால் கேரள மாநிலத்தில் வாழும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேரள மாநிலத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்கள் 2-ம் கட்டமாக அனுப்புவதற்காக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டம் சார்பில் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மூலமாகவும், வருவாய்த்துறை சார்பில் வெம்பாக்கம் தாலுகா அலுவலகம் மூலமாகவும், பள்ளிக் கல்வித் துறை சார்பாக 40-க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் மூலமாக பெறப்பட்டது.

அதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகம் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் இருந்து, அரிசி, துவரம் பருப்பு, ரவை, மைதா மாவு, கோதுமை மாவு, சர்க்கரை, உப்பு, வாளி, குவளை, பிஸ்கெட், டீத்தூள், எண்ணெய், வீட்டு உபயோகப் பொருட்கள், பாத்திரங்கள், தட்டு, தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவை மொத்தம் ரூ.47 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் 6 லாரிகள் மூலம் கேரள மாநிலம், வயநாட்டிற்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

முன்னதாக நிவாரண பொருட்களை கலெக்டர் பார்வையிட்டார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, மகளிர் திட்ட அலுவலர் ஜெயசுதா, உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் உமாமகேஸ்வரி, முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார், அரசு அலுவலர்கள், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உடனிருந்தனர்.

இதன்மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து முதல் கட்டமாக ரூ.63 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பிலும், 2-ம் கட்டமாக ரூ.47 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.1 கோடியே 66 ஆயிரம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் கேரள மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com