கடலூர் மாவட்டத்தில் ரூ.350 கோடியில் வெள்ளத்தடுப்பு பணிகள் - வருவாய் நிர்வாக ஆணையர் தகவல்

கடலூர் மாவட்டத்தில் ரூ.350 கோடியில் வெள்ளத்தடுப்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில் ரூ.350 கோடியில் வெள்ளத்தடுப்பு பணிகள் - வருவாய் நிர்வாக ஆணையர் தகவல்
Published on

கடலூர்,

கடலூர், கம்மியம்பேட்டை, திருவந்திபுரம் அணைக்கட்டு மற்றும் பஸ் நிலையம் அருகில் உள்ள சின்ன வாய்க்கால் ஆகியவற்றில் பொதுப்பணித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத்தடுப்பு பணிகளை கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் கடலூர் கம்மியம்பேட்டை கெடிலம் ஆற்றுப்பகுதியில் கரைகளை பலப்படுத்தும் பணிகளையும், கோண்டூர் பகுதியிலிருந்து மழைக்காலங்களில் வடிகால் வாய்க்கால் மூலம் தண்ணீர் கெடிலம் ஆற்றுக்கு வரும் வழியினையும் பார்வையிட்டார்.

இதன்பிறகு எதிர்வரும் வடகிழக்கு பருவமழை குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அன்புசெல்வன் முன்னிலையில், கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆனந்தராஜ், மகளிர் திட்ட அதிகாரி காஞ்சனா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்)ஆனந்தன், விருத்தாசலம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கண்ணன், கடலூர் நகராட்சி ஆணையர்(பொறுப்பு) ராமசாமி, உதவி இயக்குநர் (வேளாண்மை) பூவராகவன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் தாசில்தார்கள், பொதுப்பணித்துறை பொறியாளர்கள், ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டம் முடிவடைந்த பின்னர் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடலூர் மாவட்டத்தில் கடந்த 2015-ம் ஆண்டில் பெரிய வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது கடலூர் மாவட்டத்திற்கு வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக ரூ.350 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 90 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக இப்பணிகள் முழுமையாக முடிக்கப்படவேண்டும் என பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் நடப்பாண்டில் எதிர்வரும் பருவமழையினால் வெள்ளப்பாதிப்பு ஏற்படாமல் இருக்க வருவாய்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மைத்துறை போன்ற துறைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் 230 இடங்கள் வெள்ளபாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாக கண்டறியப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளில் காவல்துறை, தீயணைப்புத்துறை, வேளாண்மை துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறைகளை ஒருங்கிணைத்து குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுக்கள் வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமையில் செயல்படும். இவர்களின் கீழ் 2,740 தன்னார்வலர்களும் மீட்புப்பணியில் ஈடுபடுத் தப்பட உள்ளனர். இதுதவிர தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையும் உருவாக்கப்பட்டு உள்ளது. காவல்துறையில் உள்ள இளம் காவலர்கள் இதில் உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் 47 காவலர்கள் இடம் பெற்று உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத்தடுப்பு பணிகள் திருப்திகரமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com