சேற்றில் சிக்கி தவித்த குட்டி யானையை தாயுடன் சேர்க்க வனத்துறையினர் தீவிர முயற்சி

மேட்டுப்பாளையம் அருகே சேற்றில் சிக்கி தவித்த குட்டி யானையை மீட்ட வனத்துறையினர், அதனை தாயுடன் சேர்க்க தீவிர முயற்சி மேற்கொண்டு உள்ளனர்.
சேற்றில் சிக்கி தவித்த குட்டி யானையை தாயுடன் சேர்க்க வனத்துறையினர் தீவிர முயற்சி
Published on

மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறையை சேர்ந்தவர் கணேசன் (வயது 28). இவர் உழவு பணிக்காக மினி டிராக்டரில் தேக்கம்பட்டி நோக்கி நேற்று காலை சென்று கொண்டு இருந்தார். தேக்கம்பட்டி ரோட்டில் உள்ள காரமடை நீரேற்று நிலையம் அருகே அவர் சென்றபோது, கண்டியூர் காப்புகாட்டில் இருந்து நெல்லிமலை காப்புகாட்டுக்கு செல்வதற்கு சாலையை ஒரு பெண் காட்டுயானை கடக்க முயன்றது.

காட்டுயானையை பார்த்ததும் டிராக்டரை நிறுத்திவிட்டு கணேசன் சிறிது தூரம் சென்று நின்று கொண்டார். அதேபோல் அந்த பகுதிகளில் வந்த மற்ற வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அப்போது திடீரென அந்த யானை ஆக்ரோஷத்துடன், அங்கு நின்ற டிராக்டர் மற்றும் மொபட்டை மிதித்து கீழே தள்ளி சேதப்படுத்தியது.

விரட்டியடிப்பு

காட்டுயானை சாலையில் சுற்றித்திரிவது குறித்து மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனச்சரக அலுவலர் செல்வராஜ் தலைமையில் வனவர் ரவி, காப்பாளர் நித்தியானந்தம் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் பட்டாசு வெடித்து காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் தொடர்ந்து போக்கு காட்டியது. பின்னர் அந்த யானை வனத்துறையினரை துரத்த தொடங்கியது. ஆனால் வனத்துறையினர் தொடர்ந்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பின், அந்த காட்டுயானை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது.

சேற்றில் சிக்கி தவித்த குட்டி யானை

இதையடுத்து வனத்துறையினர் காட்டுயானை ஆக்ரோஷமாக இருந்ததற்காக காரணத்தை அறிய முடிவு செய்தனர். அதற்காக அவர்கள் காட்டுயானை நின்ற பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்குள்ள பவானி ஆற்றின் கரையோரத்தில் பழைய வாய்க்காலில் சேற்றில் சிக்கி வெளியே வரமுடியால் குட்டியானை ஒன்று தவித்து நின்றது.

அப்போதுதான், குட்டியிடம் யாரும் சென்றுவிடக்கூடாது என்பதற்காக தாய் யானை ஆக்ரோஷத்துடன் இருந்தது வனத்துறையினருக்கு தெரியவந்தது. சேற்றில் சிக்கி இருந்த அந்த குட்டி யானை பிறந்து ஒரு மாதமே இருக்கும். இதனால் குட்டி யானை சேற்றில் இருந்து வெளியே வர முடியாமல் சிரமப்பட்டது.

தாய் யானையுடன் சேர்க்க முயற்சி

இதை பார்த்த வனத்துறையினர் உடனே அந்த குட்டி யானையை மீட்டனர். பின்னர் அதற்கு இளநீர், குளுக்கோஸ் உள்ளிட்டவை கொடுத்து தாய் யானையிடம் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து வனத்துறை ஊழியர் ஒருவர் அந்த குட்டி யானையை லாவகமாக தனது தோளில் தூக்கிக் கொண்டார். மற்ற வனத்துறையினர் நெல்லித்துறை வனப்பகுதிக்குள் அவருடன் சென்றனர். வனப்பகுதியில் 200 மீட்டர் தொலைவில் குட்டி யானையை விட்டனர்.

மேலும், வனப்பகுதிக்குள் விரட்டப்பட்ட தாய் யானையிடம் சேர்க்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு உள்ளனர். குட்டி யானையும் விடப்பட்ட பகுதியிலேயே நின்றது. குட்டியை அழைத்துச் செல்ல தாய் யானை வருமா? என்று வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com