சூளகிரி அருகே மர்மவிலங்கு கடித்து 8 ஆடுகள் செத்தன கிராம மக்கள் அச்சம்

சூளகிரி அருகே மர்ம விலங்கு கடித்து 8 ஆடுகள் செத்தன. இதன் காரணமாக கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
சூளகிரி அருகே மர்மவிலங்கு கடித்து 8 ஆடுகள் செத்தன கிராம மக்கள் அச்சம்
Published on

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இங்கு யானைகள், சிறுத்தைப்புலிகள், நரிகள், செந்நாய் உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சூளகிரி அருகே பலவதிம்மனபள்ளி கிராமத்திற்குள் மர்ம விலங்கு ஒன்று புகுந்தது.

பின்னர் அது அந்த கிராமத்தை சேர்ந்த மல்லப்பா மற்றும் யசோதம்மா ஆகியோரின் ஆட்டு கொட்டகைக்குள் நுழைந்து அங்கு கட்டப்பட்டிருந்த ஆடுகளை தாக்கி, கடித்துக்குதறியது. இதில் 8 ஆடுகள் சம்பவ இடத்திலேயே செத்தன. மேலும் 7 ஆடுகள் படுகாயமடைந்தன.

ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பொதுமக்கள் வருவதை கண்ட மர்ம விலங்கு அங்கிருந்து தப்பி ஓடி வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இது குறித்து தகவல் அறிந்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கால்நடை மருத்துவர்களும் வரவழைக்கப்பட்டு காயம் அடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் இறந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆடுகளை இழந்த விவசாயிகளும், கிராம மக்களும் வனத்துறையினரை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனிடையே கிராமத்திற்குள் நுழைந்து ஆடுகளை கடித்து குதறியது செந்நாய் என்று கால்நடை மருத்துவர்கள் உறுதி செய்தனர். ஆனால், கிராமத்திற்குள் புகுந்து, தங்கள் ஆடுகளை கடித்து குதறியது சிறுத்தைப்புலிதான் எனவும், அதை கண்ணால் பார்த்ததாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர். மேலும் சிறுத்தைப்புலி வந்து சென்றதற்கான கால் தடயமும் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com