நாகர்கோவில் அருகே 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பெண் தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்

நாகர்கோவில் அருகே 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்.
நாகர்கோவில் அருகே 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பெண் தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்
Published on

நாகர்கோவில்,

நாகர்கோவில் அருகே கேசவன்புதூரை சேர்ந்தவர் முத்தையா. இவருடைய மனைவி சரோஜா (வயது 55). இவர், தென்னந்தோப்புகளில் தேங்காய் வெட்டு நடக்கும்போது தேங்காய் எடுப்பதற்காக செல்லும் தொழிலாளி ஆவார். இவர் நேற்று காலை மங்காவிளை நெடுவிளையில் உள்ள ஒரு தென்னந்தோப்புக்கு சென்றார். அங்கு வெட்டி போட்ட தேங்காயை எடுத்துக் கொண்டு இருந்தார். தென்னந்தோப்பின் நடுவில் 40 அடி ஆழ கிணறு இருந்தது.

தேங்காய் எடுத்து கொண்டிருந்த சரோஜா கிணறு இருப்பதை கவனிக்கவில்லை. அதே சமயத்தில் கிணற்றின் தடுப்பு சுவரும் உயரம் குறைவாக இருந்தது. இந்த நிலையில் சரோஜா எதிர்பாராதவிதமாக அந்த கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார். கிணற்றில் தண்ணீர் இல்லாததால் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. விழுந்த அதிர்ச்சியில் அவர் அங்கேயே மயங்கி விட்டார். இதனால் அவர் கிணற்றில் விழுந்தது, முதலில் யாருக்கும் தெரியாமல் இருந்தது. சிறிது நேரம் கழித்த பின்னர் தான் சரோஜா கிணற்றுக்குள் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்ததை சக தொழிலாளர்கள் பார்த்துள்ளனர்.

பின்னர் இதுபற்றி நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி துரை தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிணற்றுக்குள் தவறி விழுந்த சரோஜாவை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கிணற்றில் இறங்குவதற்கு படிக்கட்டுகள் இல்லாததால் அவரை உடனடியாக மீட்க முடியவில்லை.

இதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டிக்கொண்டு கிணற்றுக்குள் இறங்கினர். பின்னர் சரோஜாவை ஒரு வலையில் தூக்கி வைத்து மேலே கொண்டு வந்தனர். இந்த மீட்பு போராட்டம் சுமார் 30 நிமிடங்கள் நடந்தது. கிணற்றில் விழுந்ததில் சரோஜாவுக்கு கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிணற்றில் விழுந்த சரோஜாவை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com