கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ.1 கோடியே 75 லட்சம் நிவாரண நிதி

திருச்சி மாவட்டத்தில் கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ.1 கோடியே 75 லட்சம் நிவாரண நிதி, அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று கலெக்டர் ராஜாமணி தெரிவித்தார்.
கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ.1 கோடியே 75 லட்சம் நிவாரண நிதி
Published on

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் ராஜாமணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி மற்றும் வேளாண்மை, மின்வாரியம், கூட்டுறவு துறை, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், விவசாய சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் விசுவநாதன் பேசுகையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். கர்நாடகம் மேகதாதுவில் அணை கட்டினால் காவிரி டெல்டா பகுதியை சேர்ந்த 12 மாவட்டங்கள் அழிந்து விடும். எனவே இதற்கு மத்திய அரசு வழங்கிய அனுமதியை திரும்ப பெறவேண்டும் என்றார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் பேசுகையில் தனியார் பயிர் காப்பீடு நிறுவனங்கள் விவசாயிகளை வஞ்சித்து வருவதால் பொதுத்துறை காப்பீடு நிறுவனங்களின் மூலம் பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றார். அய்யன் வாய்க்கால் பாசனதாரர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வீரசேகரன் பேசுகையில், நெடுஞ்சாலைத்துறையானது கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஊரக மற்றும் இதர மாவட்ட சாலைகளை உடனடியாக சீரமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மேலும் விவசாய சங்க தலைவர்கள் சின்னத்துரை, அப்துல்லா, கவுண்டம்பட்டி சுப்பிரமணியம் ஆகியோரும் பல்வேறு பிரச்சினைகள் பற்றி பேசினார்கள்.

இறுதியாக கலெக்டர் ராஜாமணி விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து கூறியதாவது:-

திருச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை 717 மி.மீ மழை பெய்து இருக்க வேண்டும். ஆனால் 460 மி.மீ மழை தான் பெய்து உள்ளது. இது இயல்பை விட 41 சதவீதம் குறைவு ஆகும். திருச்சி மாவட்டத்தில் 1,760 கரும்பு விவசாயிகளுக்கு ரூ.1 கோடியே 91 லட்சத்து 39 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு உள்ளது. 2016-17-ம் நிதியாண்டில் பயிர் காப்பீடு செய்த 20 ஆயிரத்து 323 விவசாயிகளுக்கு ரூ.45 கோடியே 88 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 17 ஆயிரத்து 653 விவசாயிகளின் வங்கி கணக்குகளில் ரூ.41 கோடியே 82 லட்சம் தான் இதுவரை வரவு வைக்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள விவசாயிகளுக்கு காப்பீடு தொகை பெற்று வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும்.

2018-19-ம் நிதியாண்டுக்கு மத்திய கூட்டுறவு வங்கியின் மூலமாக பயிர் கடன் ரூ.317 கோடி வழங்க நிர்ணயம் செய்யப்பட்டு இதுவரை 27 ஆயிரத்து 229 விவசாயிகளுக்கு ரூ.170 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டு உள்ளது. கஜா புயலால் திருச்சி மாவட்டத்தில் 1,648 எக்டேர் வாழை, 234 எக்டேர் எலுமிச்சை, 105 எக்டேர் தென்னை மரங்கள் சேதம் அடைந்து உள்ளன. மொத்தத்தில் வேளாண் பயிர்கள் 228 எக்டேரிலும், தோட்டக்கலை பயிர்கள் 2,293 எக்டேரிலும் கஜா புயலின் காரணமாக சேதம் அடைந்து இருப்பது கணக்கிடப்பட்டு உள்ளது. சேத விவர அறிக்கை இன்னும் ஓரிரு நாட்களில் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

கஜா புயலால் பகுதியாக சேதம் அடைந்தவை, முழுமையாக சேதம் அடைந்தவை என மொத்தம் 3 ஆயிரத்து 611 வீடுகள் திருச்சி மாவட்டத்தில் சேதம் அடைந்து உள்ளன. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தமிழக அரசிடம் இருந்து ரூ.1 கோடியே 75 லட்சம் நிதி வரப்பெற்று உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் பெயர், முகவரி, வங்கி கணக்கு எண் சேகரிக்கப்பட்டு வருகிறது. அடுத்த வாரம் அவர்களது வங்கி கணக்கில் நிவாரண நிதி வரவு வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com