‘கஜா’ புயல் பாதிப்பை பார்த்து மத்திய குழுவினர் கண் கலங்கினர் - தம்பிதுரை பேட்டி

‘கஜா’ புயல் பாதிப்பை பார்த்து மத்திய குழு வினர் கண் கலங்கினர் என தம்பிதுரை கூறினார்.
‘கஜா’ புயல் பாதிப்பை பார்த்து மத்திய குழுவினர் கண் கலங்கினர் - தம்பிதுரை பேட்டி
Published on

வெள்ளியணை,

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட ஜெகதாபி ஊராட்சியில் பொதுமக்களை சந்தித்து குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். இதில் பாராளுமன்ற துணை சபா நாயகர் தம்பிதுரை கலந்து கொண்டு, ஊராட்சிக்கு உட்பட்ட ஜெகதாபி கஸ்பா, அய்யம்பாளையம், பொம்மணத்துப்பட்டி, பொரணி, சுப்பாரெட்டியூர், ஆனந்தகவுண்டனூர், மோளக்கவுண்டனூர், அல்லாரிக்கவுண்டனூர், துளசிக்கொடும்பு, பால்வார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு மனுக்களை பெற்று கொண்டார்.

அதனை தொடர்ந்து பாராளுமன்ற துணை சபாநாயகர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த ஆறு மாத காலமாக அனைத்துப்பகுதி மக்களையும் நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை நிறைவேற்றி தரும் பணியில் ஈடுபட்டுள்ளோம். டெல்லி சென்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் நானும் சென்றேன். அப்போது கஜா புயல் பாதிப்பு குறித்து எடுத்துக்கூறி மத்திய அரசு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்தோம். இதையடுத்து உடனடியாக புயல் சேதங்களை பார்வையிட மத்தியக்குழு அனுப்பி வைக்கப்பட்டது. இக்குழுவினர் புயல் பாதித்த பகுதிகளை பார்த்து விட்டு கண்கலங்கினர். எனவே இந்த பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அவ்வாறு அறிவித்தால் தான் நாம் எதிர்பார்க்கின்ற அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்.

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு மு.க.ஸ்டாலின் அமைச்சராக இருந்தபோது, அனுமதி கொடுத்துவிட்டு, தற்போது எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு அரசை குறை கூறுகிறார். ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது என்பதுதான் தமிழக அரசின் முடிவு. அதற்கான முயற்சிகளை தொடர்ந்து தமிழக அரசு மேற்கொள்ளும். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மூத்த அரசியல்வாதி, அனுபவம் மிக்கவர், சிறந்த போராளி. அவர் நிவாரண பணிகளில் அமைச்சர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர் என்று சொன்னது உண்மை தான். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, வட்டாட்சியர் ஈஸ்வரன் (கரூர்), கூட்டுறவு சங்க பிரதிநிதி கிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அதிகாரி பாலசந்தர், பொறியாளர் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, நேற்று மாலை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை உப்பிடமங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட ஏபிநகர், லிங்கத்தூர், உப்பிடமங்கலம், ரங்கபாளையம், சின்னாக் கவுண்டனூர், கஞ்சமனூர், ஜோதிவடம், வெண்ணிலை, லட்சுமணப்பட்டி, ராசாக்கவுண்டனூர், கருப்பூர், சாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com