கஜா புயலால் அடிப்படை வசதிகளை இழந்து தவிக்கும் கிராம மக்கள்

கஜா புயலால் அடிப்படை வசதிகளை இழந்து கிராமமக்கள் தவிக்கின்றனர். மேலும் பாசி நிறைந்த குளத்து தண்ணீரை குடிக்க பயன் படுத்தும் அவல நிலையில் உள்ளனர்.
கஜா புயலால் அடிப்படை வசதிகளை இழந்து தவிக்கும் கிராம மக்கள்
Published on

கீரமங்கலம்,

கீரமங்கலம் அருகே லெட்சுமிநரசிம்மபுரம் ஊராட்சியில் உள்ளது சுக்கிரன்குண்டு கிராமம். இங்கு 60 குடும்பங்கள் உள்ளன. 150-க்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட கிராமம். 20 அரசு வீடுகள், மற்ற அனைத்தும் 6 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட தென்னை கீற்று கொட்டகைகள். இங்கு வசிக்கும் மக்களுக்கு 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி, ஒரு அங்கன்வாடி மையம் உள்ளது.

கஜா புயலால் காற்றும் மழையும் தாக்கிய போதும் மரங்கள் ஒடிந்த விழுந்த போதும் குடிசைகள் சேதமடைந்த போதும் கூட அந்த மக்கள் அந்த குடிசைகளை விட்டு வெளியே வரவில்லை. கை குழந்தைகள் முதல் கர்ப்பிணிகள் வரை இடிந்து விழுந்த குடிசைகளின் ஓரங்களில் நின்று கொண்டனர். அடுத்த நாள் அருகில் உள்ள அங்கன்வாடி சாவியை வாங்கி தங்கியுள்ளனர். இந்த நிலையில்ஒரு நாள் மட்டும் உணவும், தண்ணீரும் கிடைத்துள்ளது. அடுத்தடுத்த நாட்களில் அவர் களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. புயலாலும் மழையாலும் விவசாயம் அழிந்துவிட்டதால் விவசாய வேலைகளும் கிடைக்கவில்லை.

புயலால் அடித்து செல்லப்பட்ட குடிசைகளை சீரமைக்க வழியில்லாமல் சாலை ஓரங்களில் கிழிந்து கிடந்த பதாகைகள், துணிகளை எடுத்து வந்து குடிசையில் போர்த்தி வைத்து அதற்குள் வசிக்கின்றனர். இந்த கிராம மக்கள் குடிக்க அருகில் உள்ள மாட்டு சாணமும், தேங்காய் மட்டைகளும், விறகுகளும், பிளாஸ்டிக் குப்பைகளும் நிறைந்து பச்சை பாசி படந்துள்ள குளத்து தண்ணீரையே குடங்களில் எடுத்து வந்து குடிக்கவும், சமைக்கவும் பயன்படுத்துகின்றனர்.

கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளும் புயலால் சேதமடைந்தது. அரசு கட்டிக்கொடுத்த வீடுகளும் சேதமடைந்துள்ள நிலையில், வீட்டுக்குள் நனைந்து இருந்த குடும்ப அட்டை, ஆதார் அட்டை, குழந்தைகளின் பிறப்புச் சான்று உள்ளிட்ட அத்தனை ஆவணங்களும் நனைந்து விட்டதால் அதனை வீட்டு வாசலில் காயவைத்து வருகின்றனர். இப்படி முற்றிலும் பாதிக்கப்பட்டு குடிக்க தண்ணீர் கூட கிடைக்காத இந்த கிராம மக்களுக்கு இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லையாம். வழி தவறி வரும் தனியார் நிவாரணக்குழுக்கள் கொடுக்கும் உணவை வாங்கி சாப்பிட்டு வாழ்கிறார்கள். குளத்து தண்ணீரை குடித்து பலருக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

மேலும் மருத்துவ முகாம் மற்றும் குடிதண்ணீர், உணவு, தெருக்களில் தேங்கி இருக்கும் தண்ணீரில் பிளசிங் பவுடர் தெளித்து, விரைவில் தண்ணீர், மின்சார வசதி ஆகிய அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால் அந்த கிராம மக்கள் நிம்மதி அடைவார்கள். மேலும் தங்களுக்கு மேட்டுப்பகுதியில் புயல், மழையை தாங்கும் வகையில், நிரந்தரமான வீடுகளும், குடிக்க தண்ணீரும் கொடுத்தால் போதும் உழைத்து சாப்பிடுவோம் என்று அந்த பகுதி கிராம மக்கள் கூறுகின்றனர்.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com