செங்குன்றத்தில் பிளஸ்-2 மாணவரை கடத்தி சென்ற கும்பல்; ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் கைது

செங்குன்றத்தில் காதல் போட்டியில் பிளஸ்-2 மாணவரை கடத்தி சென்ற ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
செங்குன்றத்தில் பிளஸ்-2 மாணவரை கடத்தி சென்ற கும்பல்; ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் கைது
Published on

கடத்தி சென்று திருமணம்

சென்னை அடுத்த புழல் ஜெயின் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் (வயது 21) ஆட்டோ டிரைவரான இவர், கடந்த ஆண்டு செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் மாணவியை கடத்திச்சென்று கோவிலில் கட்டாய திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், பள்ளி மாணவியை கடத்தியதாக கிஷோர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இதற்கிடையே, கிஷோர் ஜாமீனில் வெளி வந்த நிலையில், அந்த மாணவி செங்குன்றத்தை அடுத்த கண்ணம்பாளையம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் மாணவன் ராகுல் (17) என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

கடத்தலில் 3 பேர் கைது

இந்த விபரம் கிஷோருக்கு தெரியவர ஆத்திரமடைந்த அவர், மாணவியின் காதலரான ராகுலை கடத்த திட்டமிட்டதாக தெரிகிறது. இதையடுத்து நேற்று முன்தினம் கிஷோர் மற்றும் அவரது நண்பர்களான சச்சின் தீபக் (26), சரண்குமார் (24) ஆகியோர் சேர்ந்து ராகுலை ஆட்டோவில் கடத்திச் சென்றனர்.

இதுகுறித்து செங்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து, நேற்று பாடியநல்லூர் சுங்கச்சாவடி அருகே பதுங்கி இருந்த கிஷோர் மற்றும் அவரது நண்பர்களான சச்சின் தீபக், சரண்குமார் ஆகிய 3 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

மேலும், அங்கு கடத்தி வைக்கப்பட்ட ராகுலை பத்திரமாக மீட்ட போலீசார், அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பள்ளி மாணவன் கடத்தல் சம்பவம் செங்குன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com