புதிதாக திறக்கப்பட இருந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

அனுப்பர்பாளையம் அருகே புதிதாக திறக்கப்பட இருந்த டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதிதாக திறக்கப்பட இருந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
Published on

அனுப்பர்பாளையம்,

அனுப்பர்பாளையம் ஏ.வி.பி.ரோடு கவிதா லட்சுமி நகர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி நேற்று முதல் அந்த கடை திறக்கப்பட இருந்தது. இதற்காக நேற்று முன்தினம் இரவு மதுபாட்டில்கள் உள்ளிட்ட பொருட்கள் அங்கு வந்து இறங்கின.

இதை அறிந்த பொதுமக்கள் ஆவேசம் அடைந்தனர். இந்த நிலையில் பெண்கள் உள்பட அந்த பகுதியை சேர்ந்த அரசியல் கட்சியினர் உள்பட சுமார் 150 பேர் நேற்று காலையில் சம்பந்தப்பட்ட கடை முன்பு திரண்டனர்.

பின்னர் அந்த பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் அறிந்ததும் அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறியதாவது:-

தற்போது திறக்கப்பட உள்ள டாஸ்மாக் கடையை சுற்றி ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மேலும் கடைக்கு மிக அருகில் அரசு பள்ளி உள்ளது. இங்கு டாஸ்மாக் கடை திறந்தால் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு பாதுகாப்பு இருக்காது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே இந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட இருந்த நிலையில் பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக கடை திறக்கப்படவில்லை.

இந்த நிலையில் தற்போது மீண்டும் இங்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட உள்ளது. இது இந்த பகுதி மக்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இந்த கடையை திறக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மேலும் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி கடையை திறந்தால், கடையை சூறையாடவும் தயங்க மாட்டோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதைத்தொடர்ந்து போலீசார் டாஸ்மாக் அதிகாரியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்போது பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் டாஸ்மாக் கடை திறக்கப்படாது என்று உறுதி அளித்தார். இதனால் அந்த டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து தங்கள் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com