கோவில் ஆபரணங்கள் தயாரிக்கும் கைவினை கலைஞர்களுக்கு புவிசார் குறியீடு சான்றிதழ்

கோவில் ஆபரணங்கள் தயாரிக்கும் 2 கைவினை கலைஞர்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழை அறிவுசார் சொத்துரிமை வக்கீல்கள் சங்க தலைவர் சஞ்சய்காந்தி வழங்கினார்.
கோவில் ஆபரணங்கள் தயாரிக்கும் கைவினை கலைஞர்களுக்கு புவிசார் குறியீடு சான்றிதழ்
Published on

தஞ்சாவூர்,

அறிவுசார் சொத்துரிமை வக்கீல்கள் சங்க தலைவரும், சென்னை ஐகோர்ட்டு வக்கீலுமான சஞ்சய்காந்தி தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நகைகள் தயாரிக்கப்பட்டு வந்தாலும், நாகர்கோவில் வடசேரியில் தயாரிக்கப்படும் டெம்பிள் ஜூவல்லரி என்று அழைக்கப்படும் கோவில் ஆபரணம் தனித்துவம் கொண்டது. பாரம்பரிய ஆபரணங்கள் தயாரிப்பு சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்தியாவில இருந்து வருகிறது.

உலகிலேயே இந்தியாவில் தான் கைவேலைப்பாட்டுடன் கூடிய கல்பதித்த ஆபரணங்கள் பயன்பாடு அதிகம் உள்ளது. 17-ம் நூற்றாண்டில் நாகர்கோவில் வடசேரி பகுதியில் தான் கைவினை கலைஞர்களை கொண்டு தென்னிந்தியாவில் பல்வேறு கோவில்களுக்கு ஆபரணங்கள் செய்யப்பட்டுள்ளது.

ஆபரணங்களை விஸ்வகர்மா சமூகத்தினர் பழமை மாறாமல் தனிச்சிறப்புடன் செய்து வருவதால் இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் இத்தகைய ஆபரணங்கள் கோவில்களின் பயன்பாட்டிற்கு விரும்பி வாங்கப்படுகின்றன. பரதநாட்டியம் ஆடும் மங்கையர்களின் நடனத்திற்கு ஏற்றவாறு ஆபரண வடிவமைப்பை கைவினை கலைஞர்கள் வடிவமைத்து தருகின்றனர். இந்த தொழிலை பாதுகாக்கும் பொருட்டு இந்திய அரசின் மேம்பாட்டு ஆணையம், கைத்தறி தொழில்துறை அமைச்சகம், நாகர்கோவில் கோவில் ஆபரணங்களுக்கு பதிவு பெற்ற உரிமையாளர் என்ற அங்கீகாரத்தை 2007-ம் ஆண்டு பெற்றது.

தமிழகத்தில் பல்வேறு பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து, அந்த பொருட்களுக்கான சான்றிதழை பெற்று கொடுத்து வருகின்றோம். அந்த வகையில் நாகர்கோவிலில் தயாரிக்கப்படும் கோவில் ஆபரணங்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் 2 பேருக்கு கிடைத்துள்ளது. மேலும் பலருக்கு இந்த சான்றிதழ் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர், நாகர்கோவில் வடசேரியை சேர்ந்த முத்துசாமி, லட்சுமணன் ஆகியோருக்கு புவிசார் குறியீடு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழை வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com