கணவருடன் சென்ற பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அட்டூழியம்

அஞ்சுகிராமம் அருகே கணவருடன் சென்ற பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கணவருடன் சென்ற பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அட்டூழியம்
Published on

அஞ்சுகிராமம்,

அஞ்சுகிராமம் அருகே மயிலாடிபுதூர் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 50), தொழிலதிபர். இவருடைய மனைவி பொன்லட்சுமி (45). இவர்கள் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் நாகர்கோவில் நோக்கி புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை ரவி ஓட்டி செல்ல, பொன்லட்சுமி பின்னால் அமர்ந்திருந்தார்.

அவர்கள் வழுக்கம்பாறை அருகே சென்று கொண்டிருந்த போது 3 மோட்டார் சைக்கிள்களில் 3 மர்ம நபர்கள் அவர்களை பின்தொடர்ந்து சென்றனர். அவர்கள் திடீரென ரவியின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து சுற்றி வளைத்தனர். இதனால், அதிர்ச்சி அடைந்த ரவி செய்வதறியாது திகைத்து நின்றார்.

அப்போது, ஒரு நபர் ரவியின் மனைவி பொன்லட்சுமியின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். உடனே, அவர் நகையை இறுக்கமாக பிடித்து கொண்டு கொள்ளையனிடம் போராடினார். இந்த போராட்டத்தில் பொன்லட்சுமி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டு அலறினார்.

உடனே, மர்ம நபர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். காயமடைந்த பொன்லட்சுமி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அஞ்சுகிராமம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கணவருடன் சென்ற பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பகுதியில் இதுபோன்ற நகை பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாக கூறப்படுகிறது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் போலீசார் ரோந்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com