சிறுபான்மையினர் நல மேம்பாட்டிற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது

சிறுபான்மையினர் நல மேம்பாட்டிற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது என சிறுபான்மையின ஆணைய தலைவர் பிரகாஷ் கூறினார்.
சிறுபான்மையினர் நல மேம்பாட்டிற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது
Published on

நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையின ஆணையத்தின் சார்பில் தமிழ்நாடு அரசு சிறுபான்மையினருக்கென செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்பான கருத்து கேட்புக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு மாநில சிறுபான்மையின ஆணைய செயலாளர் வள்ளலார், கலெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மாநில சிறுபான்மையின ஆணையத்தின் தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சிறுபான்மையினர் நல மேம்பாட்டிற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள ஒவ்வொரு ஆண்டும் 500 பேருக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மசூதிகளில் பணிபுரியும் 18 முதல் 60 வயதுக்குட்பட்ட உலமாக்களுக்காக தமிழக அரசின் சார்பில் உலமாக்கள் நல வாரியம் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாரியம் மூலம் உலமாக்களுக்கு விபத்து நிவாரணத்தொகையாக ரூ.1 லட்சமும், ஊனமுற்றோருக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையிலும், இயற்கை மரணம் அடைந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகையும், ஈமச்சடங்கு உதவித்தொகையாக ரூ.2 ஆயிரமும், மகப்பேறு உதவித் தொகையாக மாதம் ரூ.1,000 வீதம் 6 மாதங்களுக்கும், முதியோர் உதவித்தொகையாக மாதம் ரூ.1,000-ம், 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

சிறுபான்மையின மாணவர்களுக்கு 4 சதவீதம் வட்டி வீதத்தில் ரூ.30 லட்சம் வரையில் கல்விக்கடன் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேகர் தேஷ்முக் சஞ்சய், சிறுபான்மையின ஆணைய உறுப்பினர்கள் ஜேம்ஸ், சுதிர் லோகா, அல்ஹஜ் சையது கமில் சாஹிபு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர் கில்பர்ட்ராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com