

திருவாரூர்,
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறுபான்மை ஆணையத்தின் சார்பில் கருத்துக்கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்துக்கு சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கி, 30 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான வேளாண்மை இடுபொருட்கள், தையல் எந்திரம், இலவச வீட்டு மனைபட்டா, ஸ்மார்ட் கார்டு ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சிறுபான்மையின மக்களின் நலனை காக்க பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள ஒவ்வொரு ஆண்டும் 500 பேருக்கு ரூ.20 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. கிறிஸ்தவ ஆலயங்களை புதுப்பிக்க நிதி வழங்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதே போல் இஸ்லாமியர்களுக்கு மெக்கா செல்ல நிதி உதவி, நாகூர் தர்காவில் சந்தனகூடு விழா நடைபெறும் போது 40 கிலோ சந்தனக்கட்டை, ரமலான் நோன்பு கஞ்சிக்காக 4,800 டன் அரிசி வழங்கப்படுகிறது. இதன் மூலம் தமிழகத்தில் 30 ஆயிரம் பள்ளிவாசல்கள் பயன் பெறுகின்றன.
தமிழக அரசு சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் தனிநபர் கடன், கல்வி கடன், தொழில் கடன் போன்ற பல்வேறு திட்டங்களுக்கு கடன் வழங்குகிறது. சிறுபான்மையின மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறது. இதனை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
கூட்டத்தில் மாநில சிறுபான்மை ஆணையத்தின் உறுப்பினர்கள் சையதுகாமில்சாகிப், சுதிர்லோதா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜான்ஜோசப், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தியாகராஜன், வேளாண் இணை இயக்குனர் மயில்வாகனன், திருவாரூர் மருத்துவ கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம், உதவி கலெக்டர்கள் முத்துமீனாட்சி (திருவாரூர்), செல்வசுரபி (மன்னார்குடி), மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.