அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

உடையாண்டஅள்ளியில் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்க கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
Published on

ராயக்கோட்டை,

தமிழக விவசாயிகள் சங்க கிளை தொடக்க விழா மற்றும் சங்க கூட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள உடையாண்டஅள்ளியில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைத்தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். கிளை தலைவர் சண்முகம் வரவேற்று பேசினார். கிளை துணை தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் ஓ.வி.கோவிந்தராஜ், கிளை துணை செயலாளர் முருகேசன், பொருளாளர் திருமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.எம்.ராமகவுண்டர் கலந்து கொண்டு விவசாய சங்க கிளையை தொடங்கி வைத்து பேசினார். இதைத்தொடர்ந்து சங்க கூட்டம் நடந்தது.

உடையாண்டஅள்ளி அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும். விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். விவசாய விளை பொருட்களை எடுத்து செல்ல, ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதை ஏற்படுத்தி தர வேண்டும். ராயக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் போலியாக விவசாயிகள் பெயரில் கடன் எழுதி மோசடி செய்த பணியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடையாண்டஅள்ளி அருகில் கருப்பு கல் குவாரி அமைத்து, சட்ட விரோதமாக 400 அடி ஆழத்தில் இருந்து கற்கள் வெட்டி எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது. மேலும் கிரானைட் குவாரிகளால் புகை மண்டலம் ஏற்பட்டு, மாசு ஏற்படுகிறது. அதை உடனடியாக தடை செய்ய வேண்டும். தென்பெண்ணை ஆற்று நீரை உடையாண்டஅள்ளிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாய விளை பொருட்களை நாசம் செய்யும் காட்டு பன்றிகளை சுட அனுமதிக்க வேண்டும். என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com