தேர்தல் நடத்தை விதிகளை மீறி கவர்னர் செயல்படுகிறார் - முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு

தேர்தல் நடத்தை விதிகளை மீறி கவர்னர் செயல்படுகிறார் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
தேர்தல் நடத்தை விதிகளை மீறி கவர்னர் செயல்படுகிறார் - முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு
Published on

புதுச்சேரி,

புதுவை காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஜான்குமாருக்கு ஆதரவாக முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று காலை வெங்கட்டாநகரில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த மக்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அவருடன் அமைச்சர் கந்தசாமி, வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் துணை சபாநாயகர் ஏ.வி.சுப்ரமணியன், புதிய நீதிக்கட்சியின் மாநில தலைவர் பொன்னுரங்கம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், தொண்டர்கள் வாக்கு சேகரித்தனர்.

வாக்கு சேகரிப்பின் போது முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்து வருகிறது. இந்த நேரத்தில் அதிகாரிகளை அழைத்து கவர்னர் கூட்டம் போடுகிறார். கல்வி, வேளாண், மருத்துவம், நிதி ஆகிய துறை அதிகாரிகளை அழைத்து பேசியுள்ளார். இதுகுறித்து நான் கவர்னருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். அதில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது இதுபோல் அதிகாரிகளுடன் கூட்டம் நடத்துவது சரியல்ல. இது தேர்தல் விதிகளை மீறிய செயல் என்று குறிப்பிட்டுள்ளேன்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து கவர்னர் கவலைப்படுவது இல்லை. அவர் தொடர்ந்து விதிமுறைகளை மீறி செயல்படுகிறார். ஏனாமை பொறுத்தவரை ரூ.129 கோடியில் வெள்ள தடுப்பு அணை கட்ட முயற்சி எடுத்தோம். அதனை கவர்னர் தடுத்து நிறுத்தி வைத்துள்ளார். ஏனாம் தொகுதியில் சுமார் 18 திட்டங்களுக்கான கோப்புகளை நிறுத்தி வைத்துள்ளார். இதற்கு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மீதுள்ள தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி தான் காரணம்.

சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை கவர்னர் அடிக்கடி மீறுகிறார். கவர்னர் கிரண்பெடி ஏனாம் பகுதிக்கு செல்வது குறித்து அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் தெரிவித்தார். கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமைதியாக, ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தும்படி கூறியுள்ளோம். கவர்னரின் ஏனாம் பயணம் குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்வோம்.

மத்திய அரசிடம் இருந்து அரிசிக்கு பதிலாக பணமாக கொடுங்கள் என்று கேட்டது ரங்கசாமி தான். அந்த பணம் கூட தற்போது எங்களுக்கு வருவதில்லை. புதுவையில் 1லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு மத்திய அரசு நேரடியாக வங்கி கணக்கில் பணத்தை போட்டு விடுகிறது. இது கூட தெரியாமல் நாங்கள் பணத்தை கொடுப்பதில்லை என்று பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

அவரது ஆட்சி காலத்தில் சட்டம்-ஒழுங்கு நன்றாக இருந்ததாக கூறுகிறார். அவரது வீட்டின் அருகே பட்டப்பகலில் கொலை நடந்தது. தற்போது அவருடன் ஓட்டு கேட்க வருபவர்கள் எல்லாம் யார்? ரவுடிகள் தான். எனவே அவரால் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க முடியாது. காமராஜ் நகர் தொகுதியில் மதசார்பற்ற கூட்டணி கட்சி வேட்பாளர் ஜான்குமார் அமோக வெற்றி பெறுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com