கவர்னர் கிரண்பெடி காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறார் நாராயணசாமி குற்றச்சாட்டு

கவர்னர் கிரண்பெடி காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறார் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.
கவர்னர் கிரண்பெடி காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறார் நாராயணசாமி குற்றச்சாட்டு
Published on

புதுச்சேரி,

புதுவை மீன்பிடி துறைமுகத்தில் உள்ள சாலைகள் மற்றும் கட்டிடங்களை பழுதுபார்த்தல் மற்றும் மேம்படுத்துவதற்காகவும், புதிய கட்டிடங்களை கட்டுவதற்காகவும் ரூ.15.63 கோடிக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. இதன்படி மேம்பாட்டு பணிகள் ரூ.6.53 கோடிக்கும், பழுது பார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகளுக்காக ரூ.4.45 கோடிக்கும் டெண்டர் விடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த பணிகள் தொடக்க நிகழ்ச்சி தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் தலைமை தாங்கினார்.

முதல்-அமைச்சர் நாராயணசாமி மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் டெல்லி சென்று மத்திய மந்திரிகளை சந்தித்து காரியங்களை முடித்து வருகிறார். குறிப்பாக மீனவர்களுக்கான சேமிப்பு நிதி வராது என்றனர். இதுதொடர்பாக மத்திய மீன்வளத்துறை அமைச்சரை சந்தித்து பேசினோம். திட்டம் முடிந்துவிட்ட நிலையிலும் நிதியை பெற்று வந்தார்.

தற்போது நாங்கள் தடைக்கால நிவாரணம், ஓய்வூதியங்களை உரிய நேரத்தில் தருகிறோம். மீனவர்கள் பாதுகாப்புக்காக இன்சூரன்ஸ் திட்டம் கொண்டுவர உள்ளோம்.

மீன்பிடிக்க செல்லும்போது ஏற்படும் அசாம்பாவித சம்பவங்களை தொடர்ந்து கைக்குழந்தையுடன் வந்து முறையிடுபவர்களை பார்க்கும்போது வேதனையாக உள்ளது. முதல்-அமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம்தான் உதவித்தொகை தரமுடியும்.

துறைமுக முகத்துவாரத்தில் மணல் வாரும்போது மீனவர்கள் கடலுக்கு சென்றுவர சவுகரியமாக இருக்கும். துறைமுக பகுதியில் மின் விளக்கு வசதிகளும் செய்துதரப்படும். அதேபோல் மீன்களை பதப்படுத்தவும் வசதி செய்து தரப்படும். நாடாளுமன்ற தேர்தலின்போது எங்களுக்கு காட்டிய விசுவாசத்தை தொடர்ந்து காட்டவேண்டும்.

தற்போது இலவச அரிசி வழங்க முடியாதபடி தொல்லை ஏற்பட்டுள் ளது. அரிசிக்கான நிதியை ஒதுக்கி உள்ளோம். அதை நடைமுறைப்படுத்த முயற்சி செய்யும்போது கவர்னர் அரிசிக்கு பதிலாக பணம் வழங்கவேண்டும் என்கிறார். இதற்காக டெண்டர் விட கோப்பு அனுப்பினால் தடுத்து நிறுத்துகிறார்.

அரிசிக்கு பதிலாக பணத்தை வங்கிக்கணக்கில் செலுத்தினால் அந்த பணம் குடும்ப தலைவரின் கையில் கிடைக்கிறது. அவர்கள் வீண் செலவு செய்து விடுகிறார்கள். மேலும் நாள்தோறும் அரிசி விலை ஏறுகிறது. இதனால் கூடுதல் பணம்போட்டு பொதுமக்கள் அரிசி வாங்க வேண்டியது இருக்கும்.

வங்கிக்கணக்கில் பணம் செலுத்தும்போது புதுவையில் ரேஷன்கார்டு வைத்துக்கொண்டு வெளியூரில் வசிப்பவர்களுக்கும் பணம் போகிறது. இலவச அரிசி திட்டத்தின் பலன் குறித்து கவர்னரிடம் எடுத்துக்கூறியும் கேட்கவில்லை. இதனால் நீதிமன்றம் செல்ல உள்ளோம்.

ஏனாமில் ரூ.135 கோடியில் வெள்ள தடுப்புச்சுவர் கட்ட மத்திய அரசு நிதி வழங்கி உள்ளது. ஆனால் அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் மீது உள்ள கோபத்தால் அதற்கு கவர்னர் அனுமதி தர மறுக்கிறார். காழ்ப்புணர்ச்சியோடு கவர்னர் செயல்படுகிறார்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com