உப்பளம் மைதானத்தில் கவர்னர் கிரண்பெடி தேசியக்கொடி ஏற்றினார்

உப்பளம் மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவில் கவர்னர் கிரண்பெடி தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
உப்பளம் மைதானத்தில் கவர்னர் கிரண்பெடி தேசியக்கொடி ஏற்றினார்
Published on

புதுச்சேரி,

புதுச்சேரியில் குடியரசு தினவிழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதையொட்டி கடந்த சில நாட்களாக உப்பளம் மைதானத்தில் போலீஸ் அணிவகுப்பு மரியாதை, மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் ஒத்திகை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று அங்கு குடியரசு தினவிழா நடந்தது. விழா மைதானத்துக்கு காலை 8.29 மணிக்கு கவர்னர் கிரண்பெடி வந்தார்.

அவரை தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா ஆகியோர் வரவேற்று அழைத்து வந்தனர். நேராக விழா மேடைக்கு வந்த கவர்னர் கிரண்பெடி அங்கு தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது போலீஸ் பேண்டு வாத்திய குழுவினர் தேசியகீதம் இசைத்தனர்.

அதன்பின் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பினை கவர்னர் கிரண்பெடி பார்வையிட்டார். தொடர்ந்து மேடைக்கு திரும்பிய அவர் அரசு பொதுத்தேர்வுகளில் சாதனைபடைத்த பள்ளிகள், சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு விருதுகளை வழங்கினார்.

அதன்பின் காவல்துறை, காவல்படை அல்லாதோர், தேசிய மாணவவர் படை, நாட்டு நலப்பணித்திட்டம், சமுதாய நலப்பணித்திட்டம், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. விழா மேடையில் நின்றவாறு அணிவகுப்பு மரியாதையை கவர்னர் கிரண்பெடி ஏற்றுக்கொண்டார்.

பின்னர் அரசுத்துறைகளின் சாதனையை விளக்கும் வகையில் அலங்கார வண்டிகளின் அணிவகுப்பும், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடந்தன. பின்னர் சிறந்த அணிவகுப்பு, கலைநிகழ்ச்சிகள் நடத்தியவர்களுக்கு கவர்னர் கிரண்பெடி பரிசு வழங்கினார். இறுதியாக தேசியகீதத்துடன் விழா நிறைவடைந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com