குத்தாலம் அருகே பயங்கரம் பெண்ணிடம் பேசியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம், 2 பேரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்ட நிலக்கோட்டை போலீஸ்காரர் கைது

பெண்ணிடம் பேசியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் அடைந்த நிலக்கோட்டை போலீஸ்காரர், 2 பேரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். அவரை போலீசார் கைது செய்தனர். குத்தாலம் அருகே நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
குத்தாலம் அருகே பயங்கரம் பெண்ணிடம் பேசியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம், 2 பேரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்ட நிலக்கோட்டை போலீஸ்காரர் கைது
Published on

குத்தாலம்,

நாகை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறை ஆதீனம் உள்ளது. இங்கு 24-வது குருமகா சன்னிதானமாக அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளார். இவருக்கு பாதுகாவலராக நாகை மாவட்ட ஆயுதப்படையை சேர்ந்த ஜெத்தன்ராஜ்(வயது 30) என்பவர் தமிழக காவல் துறையால் நியமிக்கப்பட்டுள்ளார்.திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்தவர்.

இவர், திருவாவடுதுறை கடைவீதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வரும் ஒரு பெண்ணின் கடைக்கு சென்று அந்த பெண்ணிடம் கடந்த சில நாட்களாக தகாத முறையில் பேசி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு வழக்கம்போல் அந்த கடைக்கு போலீஸ்காரர் ஜெத்தன்ராஜ் வந்துள்ளார். அங்கு வந்த அவர், கடையில் இருந்த அந்த பெண்ணிடம் தகாத முறையில் பேசி உள்ளார்.

அதைப்பார்த்த திருவாவடுதுறை மேலவீதியை சேர்ந்த மதியழகன்(வயது 46) என்பவர், அந்த பெண்ணிடம் ஜெத்தன்ராஜ் பேசியதை தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். தன்னை படம் பிடிப்பதை கண்ட போலீஸ்காரர் ஜெத்தன்ராஜ், மதியழகனின் செல்போனை பறித்துக்கொண்டு அவரை அங்கிருந்து செல்லுமாறு விரட்டி உள்ளார்.

ஆனால் அங்கிருந்து செல்ல மறுத்த மதியழகன், தனது செல்போனை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு போலீஸ்காரர் ஜெத்தன்ராஜ் செல்போனை தர மறுத்துள்ளார். ஆனாலும் மதியழகன் மீண்டும், மீண்டும் தனது செல்போனை தரும்படி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த போலீஸ்காரர் ஜெத்தன்ராஜ், ஆதீனத்தின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியால் மதியழகனின் இடது கால் பகுதியில் சுட்டுள்ளார்.

அதைப்பார்த்த அந்த கிராம நாட்டாண்மை செல்வராஜ்(40) என்பவர், ஜெத்தன்ராஜிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது மேலும் ஆத்திரம் அடைந்த ஜெத்தன்ராஜ், நாட்டாண்மை செல்வராஜ் காலிலும் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் அவரது இடது காலில் பாய்ந்த குண்டு, காலை துளைத்துக்கொண்டு வலது காலில் பாய்ந்தது. இதனால் செல்வராஜின் 2 கால்களிலும் காயம் ஏற்பட்டுள்ளது.

அப்போது அங்கு வந்த திருவாவடுதுறை சப்பாணி தெருவை சேர்ந்த மதிவாணன்(54) என்பவரையும், ஜெத்தன்ராஜ் துப்பாக்கியால் தாக்கி உள்ளார். இதனை தொடர்ந்து துப்பாக்கியால் சுடப்பட்ட சத்தம் கேட்டு அந்த பகுதிக்கு கிராம மக்கள் திரண்டு வந்தனர். அங்கு வந்த அவர்கள் நடந்த சம்பவம் குறித்து அறிந்ததும் ஆத்திரம் அடைந்து ஜெத்தன்ராஜை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். பொதுமக்கள் தன்னை பிடிக்க வருவதை பார்த்த ஜெத்தன்ராஜ், உடனே வானத்தை நோக்கி ஒரு முறை துப்பாக்கியால் சுட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதனையடுத்து பொதுமக்கள், ஜெத்தன்ராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கி தீயிட்டு கொளுத்தினர். பின்னர் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த மதியழகன், செல்வராஜ் ஆகிய இருவரையும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் இருவரும் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த குத்தாலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். நடந்த சம்பவம் குறித்து பொதுமக்களிடம் விசாரணை நடத்திய போலீசார் தப்பியோடிய போலீஸ்காரர் ஜெத்தன்ராஜை தேடிப்பார்த்தனர்.

அப்போது அந்த பகுதியில் பதுங்கி இருந்த போலீஸ்காரர் ஜெத்தன்ராஜை சுற்றி வளைத்து பிடித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெத்தன்ராஜை கைது செய்தனர்.

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தையொட்டி திருவாவடுதுறை ஆதீனம் மற்றும் கிராமத்தில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி சூடு நடத்திய போலீஸ்காரர் ஜெத்தன்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தெரிவித்தார்.

பெண்ணிடம் பேசியதை தட்டிக்கேட்ட 2 பேரை போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com