உயரத்தில் கிடைத்த உயரிய ஞாபகம்: ராஜீப் பிரதாப் ரூடி எம்.பி. இயக்கிய விமானத்தில் பயணித்த தயாநிதிமாறன் நெகிழ்ச்சி

ராஜீவ் பிரதாப் ரூடிஎம்.பி. இயக்கிய விமானத்தில் பயணம் செய்த தயாநிதிமாறன் எம்.பி. நெகிழ்ச்சி அடைந்துள்ளார். இது உயரத்தில் கிடைத்த உயரிய ஞாபகம் என்று தெரிவித்துள்ளார்.
உயரத்தில் கிடைத்த உயரிய ஞாபகம்: ராஜீப் பிரதாப் ரூடி எம்.பி. இயக்கிய விமானத்தில் பயணித்த தயாநிதிமாறன் நெகிழ்ச்சி
Published on

சென்னை,

நினைவில் நின்ற விமான பயணம் என்ற தலைப்பில் முன்னாள் மத்திய மந்திரியும், எம்.பி.யுமான தயாநிதிமாறன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

நாடாளுமன்ற மதிப்பீட்டு குழு கூட்டம் முடிந்து டெல்லியில் இருந்து சென்னைக்கு இன்டிகோ விமானத்தில் இன்று (நேற்று) பயணித்தேன். போர்டிங் முடித்து விமானத்தின் உள்ளே அமர்ந்திருந்தேன். அப்போது நீங்களும் இதே விமானத்தில்தான் வருகிறீர்களா? என்று விமானி உடையில் இருந்த ஒருவர் என்னிடம் கேட்டார். அவர் முக கவசம் அணிந்திருந்ததால் அவரை எனக்கு அடையாளம் தெரியவில்லை. ஆனால் அவரது குரல் ரொம்பவே பரிட்சயமாக தெரிந்தது. நானும் தலையசைத்தபடி யார் அவர்? என யோசித்தேன்.

அவரோ என்னை பார்த்தபடியே சிரித்தது முக கவசத்தை மீறி அவரது கண்களில் தெரிந்தது. ஆக உங்களுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை என்றார் வியப்போடு. பிறகுதான் தெரிந்தது, அவர் என்னுடைய சகாவும், மூத்த நாடாளுமன்ற உறுப்பினரும், எனது தந்தை மறைந்த முரசொலி மாறன் மத்திய வர்த்தக மந்திரியாக பணியாற்றியபோது அதே துறையின் இணை மந்திரியாக பணியாற்றியவரும், எனது இனிய நண்பருமான ராஜீவ் பிரதாப் ரூடி என்று.

இனிய நிகழ்வு

2 மணி நேரத்துக்கு முன்புதான் என்னுடன் அந்த மதிப்பீட்டு குழு கூட்டத்தில் பங்கேற்றவர், இப்போது அரசியல்வாதி தோற்றத்தில் இருந்து விமானியாக மாறி இருப்பதை ஆச்சரியமாக பார்த்தேன். அவரிடம் மகிழ்ச்சியுடன் நீங்கள் ஒரு விமானியாக பறப்பதை என்னால் நம்ப முடியவில்லை என்றேன். அதற்கு ரூடி சிரித்தபடி ஆம், நீங்கள் என்னை அடையாளம் காண முடியாதபோதே அதை அறிந்துகொண்டேன். நான் தொடர்ச்சியாக பறந்து கொண்டிருக்கிற ஒரு விமானி என்றார்.

எனது இனிய நண்பரும், சகாவும், ஒரு விமானியாக இருப்பதை கண்டு பெருமைப்பட்டேன். உண்மையில் உயரத்தில் கிடைத்திருக்கிறது ஓர் உயரிய ஞாபகம். ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக ஆனபிறகும் விமானியாக இருப்பது அபூர்வம் அல்லவா. நீண்ட நாட்களுக்கு இந்த இனிய நிகழ்வு என் நினைவில் நிச்சயமாய் நிழலாடிக்கொண்டிருக்கும், எங்களை பத்திரமாக டெல்லியில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்தமைக்கு விமானி ராஜீவ் பிரதாப் ரூடி எம்.பி.க்கு நன்றிகள் கோடி.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com