மோடியின் வரலாற்று சிறப்பு மிக்க முடிவு காஷ்மீரில் படிப்படியாக சகஜ நிலை திரும்புகிறது பா.ஜனதா செயல் தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு

காஷ்மீரில் படிப்படியாக சகஜ நிலை திரும்புவதாக பா.ஜனதா தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா கூறினார்.
மோடியின் வரலாற்று சிறப்பு மிக்க முடிவு காஷ்மீரில் படிப்படியாக சகஜ நிலை திரும்புகிறது பா.ஜனதா செயல் தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு
Published on

பெங்களூரு,

கர்நாடக பா.ஜனதா சார்பில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு ரத்து குறித்த மக்கள் விழிப்புணர்வு கூட்டம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டு கூட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. நேரு பிரதமராக இருந்தபோது, சிலரின் சுயநலத்திற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனால் நாட்டு மக்கள் அதன் பின்விளைவுகளை அனுபவிக்க வேண்டியதாக இருந்தது. காஷ்மீரில் அந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் தவிர வேறு யாரும் நிலம் வாங்க முடியாது. வேறு எந்த உரிமையும் மற்ற மாநிலத்தினருக்கு கிடையாது.

பிரதமர் மோடி உறுதியாக செயல்பட்டு 370-வது பிரிவை ரத்து செய்துள்ளார். இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க முடிவு. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து குறித்து நாட்டு மக்களிடையே ஒரு தவறான கருத்து பரப்பப்பட்டு வந்தது. இந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கினால், நாடே பற்றி எரியும் என்றெல்லாம் கூறினர்.

ஆனால் காஷ்மீரில் படிப் படியாக சகஜ நிலை திரும்பி வருகிறது. 370-வது பிரிவு தற்காலிகமாக தான் உருவாக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள், அதை வாக்கு வங்கி அரசியலுக்கு பயன்படுத்தி கொண்டனர். அதன் மீது கை வைத்தால் எங்கு வாக்கு வங்கி பாதிக்கப்பட்டுவிடுமோ என்று அஞ்சினர். யாரும் செய்யாத சாதனையை மோடி செய்து காட்டியுள்ளார்.

சிறப்பு அந்தஸ்து வழங்க அம்பேத்கரும் எதிர்ப்பு தெரிவித்தார். அரசியலமைப்பு சட்டப்படி அனைத்து உரிமைகளையும் வழங்குவதாக அவர் கூறினார். ஆனால் சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது என்று கூறினார். இவ்வாறு ஜே.பி.நட்டா பேசினார்.

அதைத்தொடர்ந்து பேசிய மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை மந்திரி சதானந்த கவுடா, நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நமது நாட்டுக்கு மிகப்பெரிய களங்கம் ஒன்று ஒட்டிக்கொண்டது, அது காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து. இதை நீக்கிய பெருமை பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோருக்கு உண்டு. காங்கிரசின் அதிகார தாகத்தால், நாட்டிற்காக போராடியவர்களின் தியாகம் வீணானது. காஷ்மீர் விவகாரம் உள்நாட்டு பிரச்சினை. இதை உலக நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால் பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகள் தேவை இல்லாமல் இதில் தலையிடுகின்றன என்றார்.

இதில், பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ், துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள் உள்பட பா.ஜனதா நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com