தை மாத அமாவாசையையொட்டி புனிதநீராடி மூதாதையர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு

தை மாத அமாவாசையையொட்டி பூம்புகார் சங்கமத்துறையில் புனிதநீராடி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மூதாதையர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்தினர்.
தை மாத அமாவாசையையொட்டி புனிதநீராடி மூதாதையர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு
Published on

திருவெண்காடு,

நம் முன்னோர்களின் நினைவாக மாதந்தோறும் வரும் அமாவாசை அன்று திதி கொடுப்பது வழக்கமாகும். அவ்வாறு செய்ய முடியாதவர்கள் ஆடி, தை, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை அன்று மூதாதையர்களுக்கு திதி கொடுத்து வழிபடுவர். அந்த வகையில் நேற்று தை மாத அமாவாசையையொட்டி காவிரி கடலோடு கலக்கும் பூம்புகார் சங்கமத்துறையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மூதாதையர்களின் நினைவாக திதி கொடுத்து வழிபட்டனர். அப்போது அவர்கள், எலுமிச்சை பழம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை காவிரி கடலோடு கலக்கும் சங்கமத்துறையில் தண்ணீரில் விட்டு வழிபாடு நடத்தினர். மேலும், அந்த பகுதியில் உள்ள ரத்தினபுரனேஸ்வரி கோவிலில் அம்மனுக்கு மாவிளக்கு வைத்து பெண்கள் வழிபாடு செய்தனர். மேலும், தை மாத அமாவாசையையொட்டி ஏராளமான பொதுமக்களும் பூம்புகார் சங்கமத்துறையில் புனிதநீராடி சாமியை வழிபட்டனர். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்ததால் காவிரி ஆற்று தண்ணீர் கடலோடு சங்கமித்து கரை புரண்டு ஓடியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் புனிதநீராடினர்.

சுவேதாரண்யேஸ்வரர் கோவில்

இதேபோல் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள அக்னி, சூரியன், சந்திரன் ஆகிய முக்குளங்களில் அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்து ஏராளமான பக்தர்கள் முக்குளங்களிலும் புனிதநீராடினர். இதில் கோவில் அர்ச்சகர் வினோத்குருக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தை மாத அமாவாசையையொட்டி பூம்புகார் மற்றும் திருவெண்காட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வேலுதேவி, முருகவேல் ஆகியோர் தலைமையில் போலீசார் செய்து இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com