

மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் டாக்டர் சரவணன் எம்.எல்.ஏ. வீதி வீதியாகச் சென்று மக்களை நேரடியாக சந்தித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று இரவு மதுரை பி.பி.குளம், இந்திரா நகர் பகுதிகளில் தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு கூறி வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வீட்டுமனைப் பட்டா வழங்க சுப்ரீம் கோர்ட் வரை சென்று சட்டப் போராட்டம் செய்துபட்டாவை வாங்கி தருவேன். அதுவரை உங்களுக்கு கட்டடங்களை அகற்ற விடாமல் பார்த்துக்கொள்வேன். இந்தப் பகுதி மக்களுக்கு கொரோனா காரணமாக ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தேவையான காய்கறிகள், அரிசி மற்றும் உணவுப் பொருட்களை வழங்கி உள்ளேன். மேலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்ட காலங்களில் எனது சொந்த செலவில் லாரி லாரியாக தண்ணீர் வழங்கி மக்கள் தாகத்தை போக்கி இருக்கிறேன். ஆகவே இந்த சட்டமன்ற தேர்தலில் நான் வெற்றி பெற்றால் உங்களில் ஒருவனாக இருந்து மக்கள் சேவை செய்வேன். எனக்கு பணம் சம்பாதிப்பது நோக்கமில்லை.
எனக்கு வருமானம் மருத்துவமனையில் இருந்து வருகிறது. நீங்கள் எல்லோரும் எனது மருத்துவமனைக்கு வந்திருப்பீர்கள். உங்களைப் பற்றி எனக்குத் தெரியும். என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியும். எப்பொழுது வேண்டுமானாலும் நீங்கள் நேரடியாக வந்து என்னை சந்திக்கலாம். நான் பிறந்து வளர்ந்த தொகுதி என்பதால் உங்களிடம் உரிமையாக கேட்கிறேன். நம்மில் ஒருவர் என்று நினைத்து தாமரை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச்செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
நேதாஜி மெயின் ரோட்டில் தொடங்கி பீ.பி.குளம், முல்லை நகர், இந்திரா நகர், காமராஜ் தெரு அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்கள் டாக்டர் சரவணன் எம்.எல்.ஏ.வுக்கு மலர்கள் தூவி உற்சாகமான வரவேற்பு கொடுத்தனர். மேலும் பல வீடுகள் முன்பு தாமரை கோலமிட்டு இருந்தனர்.