

சீர்காழி,
சீர்காழியில் கடைவீதியில் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நாகேஸ்வரமுடையார் கோவில் உள்ளது. இந்த பகுதியில் கோவிலுக்கு சொந்தமான குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகம் உள்ளன. இந்தநிலையில் கோவிலுக்கு சொந்தமான நாகை கீழவீதியில் ராமச்சந்திரன் (வயது 48) என்பவர் வீடு கட்டி குடியிருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ராமச்சந்திரன், கடந்த சில ஆண்டுகளாக வீட்டுக்கான வாடகையை கோவில் நிர்வாகத்திடம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அவர், கோவிலின் அனுமதி இன்றி அந்த வீட்டை வணிக பயன்பாட்டிற்காக உள்வாடகைக்கு விட்டு வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து இந்துசமய அறநிலையத்துறை சார்பில் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வாடகை நிலுவை தொகையை ராமச்சந்திரன் செலுத்தவில்லை.
இந்தநிலையில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட வீட்டை வணிக நிறுவனமாக மாற்றி உள்வாடகைக்கு விட்டதால் அந்த வீட்டை இடித்து அப்புறப்படுத்த இந்துசமய அறநிலையத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி நேற்று போலீஸ் உதவியுடன் கும்பகோணம் இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா தலைமையில் செயல் அலுவலர் அன்பரசன் முன்னிலையில் பணியாளர்கள் வீட்டில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்தினர். பின்னர் பொக்லின் எந்திரம் மூலம் வீடு இடித்து அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.