வன உரிமை சட்டத்தை அமல்படுத்தக்கோரி உண்ணாவிரதம் அரூரில் நடந்தது

தமிழகத்தில் மலைவாழ்மக்கள் வசிக்கும் கிராமங்களில் வன உரிமை சட்டத்தை அமல்படுத்தக்கோரி அரூரில் மலைவாழ் மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வன உரிமை சட்டத்தை அமல்படுத்தக்கோரி உண்ணாவிரதம் அரூரில் நடந்தது
Published on

அரூர்,

தமிழகத்தில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் தேசிய மலைநாடு மக்கள் கட்சி சார்பில் அரூர் கச்சேரிமேட்டில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கட்சி தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி தலைவர் ஜடையன், மாநில செயலாளர் வேலாயுதம், மாநில பொருளாளர் மாது ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்தில் உள்ள மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமங்களில் கிராமசபா அமைத்து வனஉரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். பழங்குடியினர் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் உள்ள மலைவாழ் பகுதிகளான சித்தேரி மலை, பச்சைமலை, ஏற்காடு மலை, கொல்லிமலை, கல்வராயன்மலை, ஜவ்வாது மலை, ஏலகிரி மலை ஆகியவற்றை சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும்.

பயிர் காப்பீடு

சித்தேரி மலை ஊராட்சிக்குட்பட்ட பேரேரிபுதூரை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யும் போக்கை வனத்துறையினர் கைவிட வேண்டும். தோல்தூக்கிமுதல் சித்தேரி வரை உள்ள சாலையை அகலப்படுத்த வேண்டும். சித்தேரி மலை ஊராட்சியில் கடும்வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண உதவி வழங்கவேண்டும். இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு பயிர்காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

சித்தேரி, மலைநாடு பகுதிகளில் பூர்வீகமாக விவசாயம் செய்து வாழ்ந்து வரும் மலைவாழ் மக்களுக்கு வனஉரிமை பட்டா வழங்க வேண்டும். சித்தேரி மலைப்பகுதியில் தேக்கல்பட்டி முதல் புதுவலவு, வாச்சாத்தி முதல் கலசப்பாடி ஆகிய மலைகிராமங்களுக்கு சாலைவசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.

என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் உண்ணாவிரத போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் மலைவாழ் மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com