மிளாவை வேட்டையாடி இறைச்சியை சமைத்தவர் கைது வனத்துறையினர் நடவடிக்கை

தளவாய்புரம் வனப்பகுதியில் மிளாவை வேட்டையாடி இறைச்சியை சமைத்தவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
மிளாவை வேட்டையாடி இறைச்சியை சமைத்தவர் கைது வனத்துறையினர் நடவடிக்கை
Published on

ஆரல்வாய்மொழி,

பூதப்பாண்டி வனச்சரகத்திற்கு உள்பட்ட பணக்குடி அருகே தளவாய்புரம் வனப்பகுதியில் மிளா வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பூதப்பாண்டி வனசரகர் வெங்கடாசலபூபதி தலைமையில் வனவர்கள் சிவகுமார், பிரவீன் மற்றும் வனக்காப்பாளர்கள் தளவாய்புரம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு ரவிச்சந்திரன் (வயது45) என்பவர் வீட்டுக்குள் புகுந்து சோதனையிட்ட போது, அவர் மிளாவை வேட்டையாடி அதன் இறைச்சியை சமைத்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருடன் ரோஸ்மியாபுரத்தை சேர்ந்த இசக்கிமுத்து (30) என்பவரும் உடனிருந்தார்.

வனத்துறையினரை கண்டதும் இருவரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். உடனே, வனத்துறையினர் விரைந்து செயல்பட்டு ரவிச்சந்திரனை சுற்றி வளைத்து பிடித்தனர். அதற்குள் இசக்கிமுத்து தப்பி ஓடி விட்டார்.

ரவிச்சந்திரனிடம் விசாரணை நடத்திய போது வனப்பகுதியில் இருந்து மிளாவை வேட்டையாடி கறி சமைத்து கொண்டிருந்ததை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து ரவிச்சந்திரனை அதிகாரிகள் கைது செய்து, அவர் சமைத்து கொண்டிருந்த மிளா கறியை கைப்பற்றி ஆரல்வாய்மொழி வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர், ரவிச்சந்திரன் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நாகர்கோவில் வன சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com