

நாகப்பட்டினம்,
நாகை கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் துணை கலெக்டர் வேலுமணி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருவெண்காடு, கீழமூவர்கரை மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த சண்முகவேல் (வயது 51) மற்றும் அவருடைய மனைவி கனியமுது (42) கலந்து கொண்டனர். அப்போது இவர்கள் தங்கள் குடும்பத்தை கீழமூவர்கரை மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் ஊரை விட்டு ஒதுக்கி உள்ளதாகவும், இதுதொடர்பாக பலமுறை கலெக்டரிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி தாங்கள் கொண்டு வந்த கைப்பையில் இருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து தங்கள் உடலில் ஊற்ற முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாகூர் போலீசார் அவர்களிடம் இருந்து மண்எண்ணெய் கேனை பறித்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் சண்முகவேல், கனியமுதுவை எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். குறைதீர்க்கும் கூட்டத்தில் கணவன், மனைவி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.