

பெங்களூரு,
பெங்களூரு கொத்தனூர் அருகே துர்கா பரமேஸ்வரி லே-அவுட்டில் வசித்து வருபவர் கல்லேஷ். இவரது மனைவி ஷில்பா(வயது 21). இந்த தம்பதிக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு தான் திருமணம் நடந்திருந்தது. கணவன், மனைவியின் சொந்த ஊர் பல்லாரி மாவட்டம் ஆகும். திருமணத்திற்கு பின்பு அவர்கள் துர்கா பரமேஸ்வரி லே-அவுட்டில் வாடகை வீட்டில் வசித்தனர். ஆன்லைனில் உணவு பொருட்கள் விற்கும் நிறுவனத்தில் ஊழியராக கல்லேஷ் வேலை பார்த்து வந்தார். ஷில்பாவும் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்தார்.
இந்த நிலையில், கடந்த 12-ந் தேதி வேலைக்கு சென்ற ஷில்பா வீட்டுக்கு திரும்பி வரவில்லை என்றும், தனது மனைவி காணாமல் போய் விட்டதாகவும் கூறி கொத்தனூர் போலீஸ் நிலையத்தில் கல்லேஷ் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷில்பாவை தேடிவந்தனர். இதற்கிடையில், ஷில்பா காணாமல் போக வாய்ப்பில்லை என்றும், அவரை கல்லேஷ் கொலை செய்திருக்க வாய்ப்புள்ளதாகவும் கொத்தனூர் போலீசில் ஷில்பாவின் பெற்றோர் தெரிவித்தனர்.
இதையடுத்து, கல்லேஷ் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது நடவடிக்கைகளை போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். பின்னர் சந்தேகத்தின் பேரில் கல்லேசை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது தனது மனைவி காணாமல் போகவில்லை என்றும், அவரை கொலை செய்ததுடன், அவருடைய உடலை தன்னுடைய சகோதரருடன் சேர்ந்து குழி தோண்டி புதைத்து விட்டதாகவும் போலீசாரிடம் கல்லேஷ் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, கல்லேஷ், அவரது அண்ணன் கிருஷ்ணப்பா ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், பரபரப்பு தகவல்கள் வெளியானது.