

குன்னூர்
குன்னூர் அருகே ஒதனட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர் விவசாயிகளாக உள்ளனர். இவர்கள் காய்கறி மற்றும் தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காய்கறி விவசாயத்தை பொறுத்தவரை அவரை, வெள்ளை பூண்டு, உருளை கிழங்கு ஆகியவை முக்கிய இடம் பெறுகின்றன.
மேற்கண்ட காய்கறி பயிர்களை விவசாயிகள் மே மற்றும் ஜூன் மாதத்தில் பயிரிட நிலத்தை தயார் செய்து சாகுபடி மேற்கொள்வார்கள். இந்த காய்கறி சாகுபடி ஒதனட்டி கிராமத்தில் சுமார் 60 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு நிலத்தில் விளைந்து இருந்த அவரை, வெள்ளை பூண்டு, உருளை கிழங்கு, மக்காசோளம் போன்ற பயிர்களை வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டெருமைகள் கூட்டம் மேய்ந்து நாசப்படுத்தியது.
இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகினர். இதன் எதிரொலியாக இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் மேற்கொள்ளப்படும் காய்கறி விவசாயத்தை ஒதனட்டி கிராம விவசாயிகள் காட்டெருமை கூட்டத்திற்கு அஞ்சி கைவிட்டுள்ளனர்.
ஒதனட்டி கிராம விவசாயிகள் தற்போது தேயிலை விவசாயத்திலும், காய்கறி விவசாயத்திலும் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள். பச்சை தேயிலை கிலோ ஒன்றுக்கு 8 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை மட்டுமே தருகிறார்கள். இந்த விலை கட்டுபடியாகாமல் உள்ளது. இதனை சரிகட்ட காய்கறி விவசாயமும் மேற்கொள்ள முடியவில்லை.
ஏனெனில் காய்கறி விவசாய பயிர்களை வனப்பகுதியிலிருந்து வெளியேறும் காட்டெருமைகள், கரடி போன்றவை நாசம் செய்து விடுகின்றன. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு காய்கறி பயிரிடுவதை கைவிட்டு உள்ளோம்.
இதனை கருத்தில் கொண்டு வனத்துறையினர் வன விலங்குகள் விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதை தடுக்க முன் வரவேண்டும். வன விலங்குகள் விவசாய நிலத்தில் புகாமல் தடுக்க அரசு மின்வேலி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேற்கண்டவாறு அவர் கூறினார்.